புதன், 30 டிசம்பர், 2015

டார்வின் ஸ்கூல் - வாசிப்பு

அன்றைய விலங்கியல் செய்முறைக்கூடத்தில் இல்லை அறிவியல் செயற்கூடம் என்றுதான் சொல்லவேண்டும் ஏனென்றால் அரசுப்பள்ளியில் அனைத்து இயல்களுக்கும்   இங்குதான் செயல்வடிவம் காண்பிக்கப்படுகிறது. விலங்கியல் தாவரவியல் வேதியியல் இயற்பியல் வேறுபாடெல்லாம் கிடையாது.


குளோரபார்ம் கலந்த நீரில் மிதந்து கொண்டிருந்த அந்த எலியை கண்ணாடி புட்டிக்கு வெளியில் எடுக்கும் பொழுது "இன்னைக்கி ரெண்டு எலிதாம்டே எடுக்கணும், ஏல வடமல புரியுதா" ன்னு விலங்கியல் ஆசிரியை உரத்த குரல் கொடுத்தார். எலி பூனைக்கு இரையாகும் நெல் மூட்டையையும் சுவற்றையும் துளைபோடும் என்பதைத்தவிர அதன் தோற்றமோ உயிரியல் பரிமாணத்தின் பங்கோ யானறியேன். ஏன் எங்கள் அறிவியல் பிரிவு பனிரெண்டாம் வகுப்பே அறிந்திருக்க வாய்ப்பில்லைதான். ஏனென்றால் நாங்கள் அல்லது நாம் பயின்றது மனப்பாடக்கல்வி எனும் அறியவகை கல்விமுறை அப்படித்தான் வழிநடத்தியது.


செயற்கூடத்தைவிட்டு எலியின் வால்பிடித்து தூக்கிவந்த போது ஏனைய பிரிவு மாணவர்களுக்கு அது வேடிக்கையாக இருக்க, நாங்கள் அறுவை சிகிட்சை செய்யத்தொடங்கினோம். ஆசிரியை மூக்கை  கைக்குட்டையால் மூடி நின்றிருந்தார். பிளேடு கொண்டு அதன் மார்பைக் கிழித்துவிட்டு, தலையை தனியாக துண்டித்தேன். தலை மிக நுட்பமாக இருக்கும் அதன் பாகங்களை பிரித்துவைப்பது அத்தனை எளிய காரியமல்ல உடல் உறுப்புகளை பிரிப்பதுபோல.


பனிரெண்டு முடித்ததும் அறிவியலை கைகழுவிவிட்டு தொழில்நுட்பம் பயில கிளைதாவிவிட்டேன். அதன்பிறகு பயன்பாட்டு மின்னணுவியலில், தொலைத்தொடர்பில் கவனம். வாரத்திற்கு இரண்டுமுறை வீட்டு ரேடியோ பெட்டியை கழட்டியும் மாட்டியும் அதை உருக்குலைத்து, பலதரப்பட்ட மின்னணு சுற்றுக்களை பரிசோதித்து உளபுளகாங்கிதம் அடைந்து இறுதியில் பண்பலை உருவாக்கத்தில் ஒரு செயல்திட்டம் உருவாக்கி மூன்றுவருடத்தை கடந்தபின் இப்பொழுது உயிரியல் நோக்கி கவனம் திரும்பியதற்கு வாசிப்புதான் மிக முக்கிய காரணம்.


இயற்கையின்றி மனிதனில்லை என அறிந்தாலும் இன்னும் பிறக்காத தலைமுறைக்காக என்ற புத்தகத்தை வாசித்த பின்னரே உயிரியல் மற்றும் காடுகளின் அவசியம் பற்றிய புரிதல் உருவாக ஆரம்பித்தது.


ஒரு சிறுவனின் அறிவியல் முயற்சிகள் அவனுக்கே ஆச்சரியமளிக்கும் வகையில் கற்றுக்கொடுக்கும் அறிவுலகத்தில் பயணிக்கின்றான். அதற்கு அவனின் அப்பா உயிரியல் பற்றி எழுதிவைத்திருக்கும் நாட்குறிப்புகள் உதவியாக இருக்கின்றன. மேலும் சில உயிரிகளோடு அவர்களின் மொழியிலேயே தொடர்பு கொள்ளவும் முடிகின்ற இவனுக்கு ஆந்தை "மாரி", முயல் "கவி பாரதி" நாய் "ரிச்சட் பார்க்கர்" போன்ற நண்பர்கள் இருக்கிறார்கள். இவர்களோடு ஓர்இரவின் நடுவில் அம்மாவிற்கு தெரியாமல் வீட்டைவிட்டு கிளம்பி டார்வின் ஸ்கூல் என்ற ஓர் அதிசய பள்ளிக்கூடத்தினை காண புறப்படுகிறார்கள். இந்த பயணத்தின் வழி நெடுகிலும் சிறுவனுக்கு உதவும் பற்பல உயிரிகளைப் பற்றிய தகவல்கள் டார்வின் உருவாக்கிய பரிணாமக்கோட்பாட்டில் அந்தந்த உயிர்களின் பங்கு போன்ற பல உயிரியல் அடிப்படைத்தகவல்களை சிறுவன் கூறுவதாகவும்   அப்பாவின் குறிப்பில் வாசித்தவைகளை தான் நிகழ் உலகில் உணர்பவைகளை எண்ணி களிப்புறுகின்றான். இடையிடையே அப்பாவின் குரல் அவனை வழிநடத்துகிறது. அந்த குரல் மற்றும் மேலும் பல தகவல்கள் ஒரு மின்னணு சில்லில் பதிவு செய்து பொருத்தப்பட்டிருப்பதுதான் உயிரிகளின் மொழியை இவன் அறிய காரணம்.


காட்டின் நில வடிவமைப்பை ஐந்தடுக்குகளாக பிரித்து வகைப்படுத்தி எழுதியிருப்பது அறிய வேண்டிய தகவல்.


எது கல்வி என்ற சரியான புரிதல் இல்லாமல், படித்தால் வேலை அதற்கான சம்பளம் என்ற அளவீட்டில் உருவாக்கப்பட்டிருக்கும் கல்விமுறை நம்மை அடிப்படை அறிவியல் அறிவில்லாத தொழில்நுட்பவாதிகளாக உருவாக்கியிருக்கிறது இன்னும் உருவாக்கிக்கொண்டிருக்கின்றது. சிறார்கள் மற்றும் மாணவர்கள் அடிப்படை அறிவியலை புரிந்துகொள்ள டார்வின் ஸ்கூல் போன்ற அறிவியல் கதைகளின் தேவை மிக அவசியம்.


ஆயிஷா நடராஜன் சிறுவர்களுக்கான இலக்கியங்கள் உருவாக்குவதில் பல முயற்சிகள் செய்து கொண்டிருக்கிறார். நான் வாசித்த அவருடைய முதல் நூல், சிறுசிறு தகவல்களும் என்னை அறிவியல் சிறுவனாக மாற்றி பால்யத்தின் உயிரியல் சார்ந்த பக்கங்களுக்கு அழைத்துப் போனது, மேற்கூறிய அறிவியல் செயற்கூடம் போன்ற நினைவுகள் உதாரணம்.


வாசித்து முடிக்கும் போது இதை யாரேனும் பள்ளிச் சிறுவருக்கு பரிசளிக்க எண்ணியது மனம். ஆனால் உறவினர் ஒருவர் பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார் அவரிடம் ஒப்படைத்துவிட்டேன்.

புதன், 16 டிசம்பர், 2015

இருண்ட நூலகம் - சிறுகதை

அலுவல் முடித்து வீடு திரும்பும் நவீனப்பெண் (புதுமைப்பெண்ணல்ல) செய்துகொள்ளும் ஒப்பனை போல கதிரவன் செம்பழுப்பை தன்மீது பூசியதோடில்லாமல் சூழ்ந்திருக்கும் மேகங்களின் மீது பரப்பியதில் திரள்களின் விளிம்புகள் அப்பெண்களின் முகத்தினை தோல்வியில் ஆழ்த்திக் கொண்டிருந்தன.
“அண்ணா நா ஆண்டாள் குப்பத்துல எறங்கிக்கிறே” னென்று ஓட்டுனரிடம் கூறும் பொழுதில் அனகாபுத்தூர் ஆற்றுப்பாலத்தை கடந்திருந்தார்கள், “என்னாஜி எங்கப்போறீங்க” எனக் கேட்டான் ரவியிடம். இந்த ஜீ எப்போ விட்டொழியுமோ என நினைத்துக்கொண்டே,
வண்டி ஆண்டாள் குப்பத்தின் நவீன பெயரான மேத்தா நகருக்குள் புகுந்து விடும் என்பதாலும், அங்கிருந்து பேருந்தில் சென்றுவிடலாம் என முன்னரே நினைத்திருந்ததாலும் மெதுவாக “குன்றத்தூர்” என்றான் ரவி.
“அன்னிக்கி இன்னான்னா அனகாபுத்தூர்னீங்கோ இன்னிக்கி இன்னான்னா குன்றத்தூர் ன்றீங்கோ, என்னாஜி எதுனா…. மேட்ரா?” என ஏதோ ரகசியம் அறிந்து கொள்ளும் முயற்சியில் பற்சில்லு மாற்றியின் (Gear) நேர் மேலே அவன் பக்கம் லேசாக திரும்பியிருக்கும் குழி ஆடி என்றே நினைக்கிறேன், அது வழியாக பின்னிருக்கையின் இடதுபக்கமிருக்கும் ரவியை தலையை உயர்த்திப் பார்த்தான். உயரம் கொஞ்சம் குறைவு.

ஒளியிலும் மொழியிலும் கெட்டிக்காரர்கள்தான் ஒட்டுநர்களெல்லாம். ரவி அவ்வப்போது கவிதையென்று வார்த்தைகளை மடக்கி மடக்கி எதையாவது எழுதி வைப்பான். "நிலவொளியில்/ ஒளி மொழி பேசுகிறார்/ ஓட்டுநர்" என்று தான் எப்போதோ ஒரு இரவின் விளிம்பிலிருந்த அதிகாலைப்பொழுதில் எழுதியது மனதில் மிகக்குறைவான வேகத்தில் ஊர்ந்து போனது.

“நூலகம் போறேன்”
மீண்டும் கண்ணாடியை எட்டிப் பார்த்துவிட்டு “ம்..லைப்ரேரி..” என்றான். வலதுபக்கமிருந்தவன் ரவியை பார்த்தானே தவிர எதுவும் கேட்கவில்லை. பெரும்பாலானோர் போகாத இடத்திற்கு போவதாகச் சொன்னால் விசித்திரமாகத்தான் பார்க்கிறார்கள். ஒருவேளை டாஸ்மக்குக்கோ, வேசி வீட்டுக்கோ போகிறேனென்றால் மேற்கொண்டு பேசியிருப்பார்களோ என்று நினைத்துக் கொண்டான். இரண்டு நிமிட அமைதிக்குப்பின் மேத்தாநகர் பாதையில் திரும்பி வாகனம் நின்று கொண்டது. இவன் மட்டும் இறங்கிக் கொண்டான்.
வெள்ளை பலகை பேருந்திற்காக காத்திருந்தான். நிறுத்தத்தின் அருகே வலது புறமாக வெள்ளைச் சீருடையணிந்த பள்ளி மாணவர்களும் மாணவிகளும் பானி பூரி வண்டிமுன் நிற்க, எத்தனைபேர் நிற்கிறார்கள் தின்பதற்காக என்ற ரீதியில் ஒருவன் கணக்கிட்டான், அவன் கையில் நூறு ரூபாய் தாளை மடக்கி வைத்திருந்தான்.
இரு ஆசிரியைகள் நிறுத்தத்திற்கு வந்து நின்றார்கள். மாணவர்களிடத்தில் சலனமோ பணிவோ கிஞ்சித்தும் எட்டிப்பார்க்கவில்லை என்பது ஒருபுறம் நிற்க. இவர்கள் நூல் வாசிப்பார்களா, இவர்கள் பள்ளியில் நூலகம் இருக்குமா, மாணவர்களை வாசிப்பின் தளத்திற்கு அழைத்துச் செல்வார்களா என்று கேள்விகள் எழுந்தபோது, சனிக்கிழமை நூலகத்திற்கு சென்றது நினைவில் வந்தது.
சனிக்கிழமை விடுமுறை. இரண்டுநாள் தூக்கமின்மை மதிய உணவிற்கு பிறகு வாசிப்பின் இடையிலேயே படுக்கையில் கிடத்திவிட்டது அவனை. விழித்துப்பார்த்தபோது திறன்பேசியில் ஐந்து நாற்பத்தொன்பதென்று நேரம் காட்டியது. அருகில் தமிழ் இலக்கிய கட்டுரைகள் கவிழ்ந்து கிடந்தது. புத்தகத்தை எடுத்து வைத்துவிட்டு முகம் கழுவி கால்சராய் அணிந்து கொண்டான்.
வெங்கட் சாமிநாதனின் கலைவெளிப் பயணங்கள், உலகத்தமிழ் மாநாட்டில் வாசிக்கப்பட்ட தமிழ் இலக்கிய கட்டுரைகள் இரண்டு நூலையும் எடுத்துக் கிளம்பினான்.
அண்ணனிடம் சென்று “நூலகம் பேட்டு வாரேன்” என்றான்.
“ம்..” என்றான் தூக்க கலக்கத்தில், இரவு அலுவல் அவனுக்கு.
அன்று உடனடியாக பேருந்து கிடைத்தது, ஒருபொழுதும் இப்படி நடக்காது இன்று அரிதாக நிகழ்ந்திருக்கிறது. அதுவும் வெள்ளைப் பலகை பேருந்து.
ஐந்து ரூபாய் நாணயம் கொடுத்தான், நான்கு ரூபாய் சீட்டும் ஒரு ரூபாய் நாணயமும் திரும்பப் பெற்றான். சீட்டில் குன்றத்தூர் என்பதற்கு பதில் “குண்டத்தூர்” என்று அச்சாகியிருந்தது. தமிழையும் தமிழனையும் தமிழக அரசையும் நினைத்து சிரிப்பதை தவிர வேறொன்றும் செய்வதற்க்கில என்று சிரித்துக் கொண்டான்.
குன்றத்தூர் “அறுவத்தியாரு” பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நடக்க ஆரம்பித்தான். அறுவத்தியாரு அந்த வழியில் செல்லும் ஊர்ந்துகளின் எண்.
நேராக நடக்கத்துவங்கினால் சிவசிவ என்று எழுதியிருக்கும் கோபுரமொன்று பார்வையில் படும், அந்த தெருவிலேயே தெய்வச்சேக்கிழார் மணிமண்டபமும் இருக்கிறது. அதற்கு சிவனின் வாசல் வரை செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு முன்னரே இருக்கும் மணிமண்டபத்தினுள் நூலகத்திற்கு சிறு கட்டிடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. நூலகத்தின் பெயர் “கலைஞர் நூலகம்”.
ரவிக்கு இந்த கட்டிடமே முரண்பாடாகத் தெரியும். பகுத்தறிவாதிகளுக்கும் பகவானுக்கும்  சம்பந்தமில்லையென்றாலும் வாக்குகள் பொறுக்குவதற்கு அதை ஏற்படுத்திக் கொள்ளவேண்டியிருக்கிறது.

தெருவின் தொடக்கதிலிருந்தே வரிசையாக மின்கம்பத்தில் கட்டப்பட்ட ஒலிப்பெருக்கியில் மந்திரம்போல தமிழை உச்சரித்து படித்துக்கொண்டிருந்தது ஒரு முதியவரின் குரல்.
மணிமண்டபத்தின் வாயிலில் பத்துக்கு பன்னிரெண்டு அளவில் ஒரு வண்ணப்பதாகை, சாமியார் ஒருவருக்கு குருபூஜை என்று விளம்பரப்படுத்தப் பட்டிருந்தது. இரும்புக் கதவை கடக்கும் போது அதிகமான காலணிகள் கண்ணில் பட்டன. பொதுவாக நூலகத்திற்கு இவ்வளவு காலணிகள் வருவதில்லை.
அங்கிருந்தே நூலகத்தைப் பார்த்தான் வெளிச்சமிருந்தது ஆனால் சாளரம் சாத்தப்பட்டிருந்தது. அருகில் சென்று பார்க்கலாமென்று நகர்ந்தபோது முதலில் இருந்த கட்டிடத்தில் தெய்வச்சேக்கிழார் அமைதியின் வள்ளலாக அமர்ந்திருந்தார். அவர் மட்டுமே இருந்தார். இரண்டாவது அமைந்திருந்த தியான மண்டபத்தில் அந்த சாமியாரின் குருபூஜை நடைபெறுவதற்கான ஆயத்தங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன. அரங்கு நிறைந்திருந்தது.
அடுத்தது கலைஞர் நூலகம். திறந்திருந்தது. கையெழுத்து போட்டுவிட்டு உள்ளே நுழைந்தான். நூலகர் நாற்பது வயது மதிக்கத்தக்க பெண். வார மாத காலாண்டிதழ்கள் வாசகர்கள் மேசையின் மீது நீச்சலடித்துக்கொண்டிருந்ததை கரை ஒதுக்கினார்.
புத்தகத்தை அறையின் மையத்திலிருக்கும் நூலகரின் மேசையில் வைத்தபோது “க்ளோசிங் டைம் சார், பக்கத்துல திருவிழா நடக்கு, பூட்ட சொல்லிட்டாங்க” என்று ஒவ்வொன்றையும் தனித்தனியாக உச்சரித்துச் சொல்லிக்கொண்டே மேசை பக்கம் வந்தார்.
“அஞ்சே நிமிடம்” என்று சொல்லி உள்ளே புகுந்தான் ரவி.
ஒரு மின்விளக்கு தவிர மற்றவை அணைக்கப்பட்டிருந்தது. இரண்டு நிமிடம் கரைவதற்குள் “என்ன பன்றீங்க அங்க, திருவிழா நடக்கு, நாளைக்கு வாங்க” மீண்டும் ஒரு எச்சரிப்பு, இப்பொழுது அவரது குரலில் எரிச்சலிருந்தது.
இவனுக்கு இரண்டு புத்தகம் எடுத்துவிட வேண்டும் என்ற எண்ணம் மாறவேயில்லை. அட்டகத்தைப் பார்த்தான் பாரதிதாசன் எழுதிய இருண்ட வீடு புத்தகம் புலப்பட்டது. எடுத்துக் கொடுத்தான். அவசரமாக பதிவு செய்து திரும்பக் கொடுத்தார் அந்த அம்மா. 
“ இன்னொண்ணு எடுத்துக்கிறேன்  நாளை என்னால வர முடியாது மேடம்..” என்றான்.
"அதுக்கு நான் என்ன செய்ய முடியும்ங்க" வெளியே வா என்பதுபோல் கையை அசத்துவிட்டு கதவை இழுத்து மூடத்தொடங்கினார்.
இருண்ட வீடு அல்ல இருண்ட நூலகம் என்று நினைத்துக்கொண்டான். கோபம் சேக்கிழார் மீதும் அந்த பாடாவதி சாமியார் மீதும்.
தெய்வங்களெல்லாம் தொலைந்து போனாலென்ன என்றிருந்தது அவனுக்கு. கெட்டவார்த்தைகளை விழுங்கினான்.

நாளை வரமுடியாது திங்கள் கிழமை அலுவலகம் சென்று திரும்பியபின் வரவேண்டும். இவர் இன்று நடந்த அத்தனையையும் மறந்து போய்விட்டால் என்ன செய்வது. சரியாக குறிப்பெடுத்தும் வைக்கவில்லை. தானாவது ஒரு புத்தகத்தை வைத்துவிட்டு ஒன்றை எடுத்து வந்திருக்கலாமோ. என எண்ணங்களை ஒட விட்டுக்கொண்டிருந்தான்.
தெருவைக் கடந்தபோது, 
இறுதியாக அபிராமி அந்தாதியிலிருந்து சில பாடல்களை வாசிக்கிறேன் என்று அதே முதியவரின் குரல் ஒலிப்பெருக்கியில் ஒலித்தது.

இன்றும் வெள்ளைப்பலகை பேருந்தை பிடித்து குன்றத்தூர் வந்து சேர்ந்தால் தெருவின் கடைசியாகத் தெரியும் கோபுரத்திற்கு முன் மேடை அமைக்கப்பட்டிருந்தது. மேடையில், தனது புனைப்பெயரை அரசின் திட்டங்களுக்கு வம்படியாக வைத்துக்கொண்டிருக்கும் முதல்வர் பெரிய அளவில் தெரிந்தார். இதை சாக்குபோக்கு சொல்லி இன்றும் நூலகத்தை அடைத்து விடுவார்களோ என்று நினைத்து வேகமாக நடக்க ஆரம்பித்தான்.
மணிமண்டபத்திற்கு சற்று தள்ளிதான் மேடை அமைத்திருந்தார்கள். மேடையில் இரு பெரியவர்கள் தபேலா ஆர்மோனியப்பெட்டி சகிதம் அமர்ந்து சோதனை ஓட்டமாக “ட்டபட்தோம்…..ட்டபட்தோம்…” என அடித்துக் கொண்டிருந்தார்கள்.
இரும்புக்கதவை தாண்டும் போது காலணிகள் வெகு குறைவு, மூன்று நான்கு சோடி.
நூலகர் செய்தித்தாள் வாசித்துக்கொண்டிருந்தார்.
இரண்டு நாள் இடைவெளி விழுந்ததில் கோபம் முற்றிலும் குறைந்திருந்தது, ஒருவேளை மறந்துவிட்டு விதாண்டாவாதம் செய்தால் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணியிருந்தான்.
அருகில் சென்று “சனிக்கிழமை ரெண்டு புத்தகம் விட்டுட்டு போனேன்” தொடர்ந்து கூறுவதற்கு முன் தலையாட்டினார். பரவாயில்லை என்றிருந்தது. இன்னொரு புத்தகம் எடுத்து வந்து பதிவு செய்ய நின்ற போது ஒரு அட்டை இருந்தது, இன்னொரு உறுப்பினர் அட்டையை தேடியும் கிடைக்கவில்லை. புத்தகத்தை பதிவு செய்யத்தொடங்கும் போது, மண்டபத்தின் காவலர் வந்தார்.
இவன் நினைத்தது போலவே வந்தவர் “ஆறரைக்கெல்லாம் மூடிருங்க, மீட்டிங் நடக்குதில்லியா” என்றார்.
நூலகரைப் பார்த்தான், அந்த அம்மாவின் மூக்குக்கண்ணாடி வழியே சோகம், வெளிப்படுத்தமுடியாத கோபம் தெரிந்தது.
“அன்னைக்கும் இப்டித்தான் செஞ்சாங்க, இன்னும் பத்து நிமிசம் அப்புறம் வந்து கத்துவாங்க” என்றார்.

எதுவும் பேசாமல் அவரை பார்த்துக்கொண்டிருந்தான். "எப்டில்லாம் கத்துனாங்க தெரியுமா சார். எப்போ தனிக்கட்டடம் கொடுப்பாங்கன்னு தெரியல" என்றார் அவர்.

“உங்க உயரதிகாரி கிட்ட சொல்லுங்க” என்றான். வேறென்ன செய்ய முடியும். அரசுக்கு எழுதிப்போடுவதில் பிரச்சனைகள் தீர்ந்துவிடுமென்றால் ஏன் இப்படி இருக்கிறது. 

ஆண்டவனும் அப்படித்தான் ஆளுபவனும் அப்படித்தான்.

வெளியில் கட்சி ஆண்டுவிழா தொடங்கியது “ நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற" என்ற வே(வி)சப் பாடலோடு……..

நன்றி: மலைகள்.காம்