புதன், 30 டிசம்பர், 2015

டார்வின் ஸ்கூல் - வாசிப்பு

அன்றைய விலங்கியல் செய்முறைக்கூடத்தில் இல்லை அறிவியல் செயற்கூடம் என்றுதான் சொல்லவேண்டும் ஏனென்றால் அரசுப்பள்ளியில் அனைத்து இயல்களுக்கும்   இங்குதான் செயல்வடிவம் காண்பிக்கப்படுகிறது. விலங்கியல் தாவரவியல் வேதியியல் இயற்பியல் வேறுபாடெல்லாம் கிடையாது.


குளோரபார்ம் கலந்த நீரில் மிதந்து கொண்டிருந்த அந்த எலியை கண்ணாடி புட்டிக்கு வெளியில் எடுக்கும் பொழுது "இன்னைக்கி ரெண்டு எலிதாம்டே எடுக்கணும், ஏல வடமல புரியுதா" ன்னு விலங்கியல் ஆசிரியை உரத்த குரல் கொடுத்தார். எலி பூனைக்கு இரையாகும் நெல் மூட்டையையும் சுவற்றையும் துளைபோடும் என்பதைத்தவிர அதன் தோற்றமோ உயிரியல் பரிமாணத்தின் பங்கோ யானறியேன். ஏன் எங்கள் அறிவியல் பிரிவு பனிரெண்டாம் வகுப்பே அறிந்திருக்க வாய்ப்பில்லைதான். ஏனென்றால் நாங்கள் அல்லது நாம் பயின்றது மனப்பாடக்கல்வி எனும் அறியவகை கல்விமுறை அப்படித்தான் வழிநடத்தியது.


செயற்கூடத்தைவிட்டு எலியின் வால்பிடித்து தூக்கிவந்த போது ஏனைய பிரிவு மாணவர்களுக்கு அது வேடிக்கையாக இருக்க, நாங்கள் அறுவை சிகிட்சை செய்யத்தொடங்கினோம். ஆசிரியை மூக்கை  கைக்குட்டையால் மூடி நின்றிருந்தார். பிளேடு கொண்டு அதன் மார்பைக் கிழித்துவிட்டு, தலையை தனியாக துண்டித்தேன். தலை மிக நுட்பமாக இருக்கும் அதன் பாகங்களை பிரித்துவைப்பது அத்தனை எளிய காரியமல்ல உடல் உறுப்புகளை பிரிப்பதுபோல.


பனிரெண்டு முடித்ததும் அறிவியலை கைகழுவிவிட்டு தொழில்நுட்பம் பயில கிளைதாவிவிட்டேன். அதன்பிறகு பயன்பாட்டு மின்னணுவியலில், தொலைத்தொடர்பில் கவனம். வாரத்திற்கு இரண்டுமுறை வீட்டு ரேடியோ பெட்டியை கழட்டியும் மாட்டியும் அதை உருக்குலைத்து, பலதரப்பட்ட மின்னணு சுற்றுக்களை பரிசோதித்து உளபுளகாங்கிதம் அடைந்து இறுதியில் பண்பலை உருவாக்கத்தில் ஒரு செயல்திட்டம் உருவாக்கி மூன்றுவருடத்தை கடந்தபின் இப்பொழுது உயிரியல் நோக்கி கவனம் திரும்பியதற்கு வாசிப்புதான் மிக முக்கிய காரணம்.


இயற்கையின்றி மனிதனில்லை என அறிந்தாலும் இன்னும் பிறக்காத தலைமுறைக்காக என்ற புத்தகத்தை வாசித்த பின்னரே உயிரியல் மற்றும் காடுகளின் அவசியம் பற்றிய புரிதல் உருவாக ஆரம்பித்தது.


ஒரு சிறுவனின் அறிவியல் முயற்சிகள் அவனுக்கே ஆச்சரியமளிக்கும் வகையில் கற்றுக்கொடுக்கும் அறிவுலகத்தில் பயணிக்கின்றான். அதற்கு அவனின் அப்பா உயிரியல் பற்றி எழுதிவைத்திருக்கும் நாட்குறிப்புகள் உதவியாக இருக்கின்றன. மேலும் சில உயிரிகளோடு அவர்களின் மொழியிலேயே தொடர்பு கொள்ளவும் முடிகின்ற இவனுக்கு ஆந்தை "மாரி", முயல் "கவி பாரதி" நாய் "ரிச்சட் பார்க்கர்" போன்ற நண்பர்கள் இருக்கிறார்கள். இவர்களோடு ஓர்இரவின் நடுவில் அம்மாவிற்கு தெரியாமல் வீட்டைவிட்டு கிளம்பி டார்வின் ஸ்கூல் என்ற ஓர் அதிசய பள்ளிக்கூடத்தினை காண புறப்படுகிறார்கள். இந்த பயணத்தின் வழி நெடுகிலும் சிறுவனுக்கு உதவும் பற்பல உயிரிகளைப் பற்றிய தகவல்கள் டார்வின் உருவாக்கிய பரிணாமக்கோட்பாட்டில் அந்தந்த உயிர்களின் பங்கு போன்ற பல உயிரியல் அடிப்படைத்தகவல்களை சிறுவன் கூறுவதாகவும்   அப்பாவின் குறிப்பில் வாசித்தவைகளை தான் நிகழ் உலகில் உணர்பவைகளை எண்ணி களிப்புறுகின்றான். இடையிடையே அப்பாவின் குரல் அவனை வழிநடத்துகிறது. அந்த குரல் மற்றும் மேலும் பல தகவல்கள் ஒரு மின்னணு சில்லில் பதிவு செய்து பொருத்தப்பட்டிருப்பதுதான் உயிரிகளின் மொழியை இவன் அறிய காரணம்.


காட்டின் நில வடிவமைப்பை ஐந்தடுக்குகளாக பிரித்து வகைப்படுத்தி எழுதியிருப்பது அறிய வேண்டிய தகவல்.


எது கல்வி என்ற சரியான புரிதல் இல்லாமல், படித்தால் வேலை அதற்கான சம்பளம் என்ற அளவீட்டில் உருவாக்கப்பட்டிருக்கும் கல்விமுறை நம்மை அடிப்படை அறிவியல் அறிவில்லாத தொழில்நுட்பவாதிகளாக உருவாக்கியிருக்கிறது இன்னும் உருவாக்கிக்கொண்டிருக்கின்றது. சிறார்கள் மற்றும் மாணவர்கள் அடிப்படை அறிவியலை புரிந்துகொள்ள டார்வின் ஸ்கூல் போன்ற அறிவியல் கதைகளின் தேவை மிக அவசியம்.


ஆயிஷா நடராஜன் சிறுவர்களுக்கான இலக்கியங்கள் உருவாக்குவதில் பல முயற்சிகள் செய்து கொண்டிருக்கிறார். நான் வாசித்த அவருடைய முதல் நூல், சிறுசிறு தகவல்களும் என்னை அறிவியல் சிறுவனாக மாற்றி பால்யத்தின் உயிரியல் சார்ந்த பக்கங்களுக்கு அழைத்துப் போனது, மேற்கூறிய அறிவியல் செயற்கூடம் போன்ற நினைவுகள் உதாரணம்.


வாசித்து முடிக்கும் போது இதை யாரேனும் பள்ளிச் சிறுவருக்கு பரிசளிக்க எண்ணியது மனம். ஆனால் உறவினர் ஒருவர் பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார் அவரிடம் ஒப்படைத்துவிட்டேன்.

புதன், 16 டிசம்பர், 2015

இருண்ட நூலகம் - சிறுகதை

அலுவல் முடித்து வீடு திரும்பும் நவீனப்பெண் (புதுமைப்பெண்ணல்ல) செய்துகொள்ளும் ஒப்பனை போல கதிரவன் செம்பழுப்பை தன்மீது பூசியதோடில்லாமல் சூழ்ந்திருக்கும் மேகங்களின் மீது பரப்பியதில் திரள்களின் விளிம்புகள் அப்பெண்களின் முகத்தினை தோல்வியில் ஆழ்த்திக் கொண்டிருந்தன.
“அண்ணா நா ஆண்டாள் குப்பத்துல எறங்கிக்கிறே” னென்று ஓட்டுனரிடம் கூறும் பொழுதில் அனகாபுத்தூர் ஆற்றுப்பாலத்தை கடந்திருந்தார்கள், “என்னாஜி எங்கப்போறீங்க” எனக் கேட்டான் ரவியிடம். இந்த ஜீ எப்போ விட்டொழியுமோ என நினைத்துக்கொண்டே,
வண்டி ஆண்டாள் குப்பத்தின் நவீன பெயரான மேத்தா நகருக்குள் புகுந்து விடும் என்பதாலும், அங்கிருந்து பேருந்தில் சென்றுவிடலாம் என முன்னரே நினைத்திருந்ததாலும் மெதுவாக “குன்றத்தூர்” என்றான் ரவி.
“அன்னிக்கி இன்னான்னா அனகாபுத்தூர்னீங்கோ இன்னிக்கி இன்னான்னா குன்றத்தூர் ன்றீங்கோ, என்னாஜி எதுனா…. மேட்ரா?” என ஏதோ ரகசியம் அறிந்து கொள்ளும் முயற்சியில் பற்சில்லு மாற்றியின் (Gear) நேர் மேலே அவன் பக்கம் லேசாக திரும்பியிருக்கும் குழி ஆடி என்றே நினைக்கிறேன், அது வழியாக பின்னிருக்கையின் இடதுபக்கமிருக்கும் ரவியை தலையை உயர்த்திப் பார்த்தான். உயரம் கொஞ்சம் குறைவு.

ஒளியிலும் மொழியிலும் கெட்டிக்காரர்கள்தான் ஒட்டுநர்களெல்லாம். ரவி அவ்வப்போது கவிதையென்று வார்த்தைகளை மடக்கி மடக்கி எதையாவது எழுதி வைப்பான். "நிலவொளியில்/ ஒளி மொழி பேசுகிறார்/ ஓட்டுநர்" என்று தான் எப்போதோ ஒரு இரவின் விளிம்பிலிருந்த அதிகாலைப்பொழுதில் எழுதியது மனதில் மிகக்குறைவான வேகத்தில் ஊர்ந்து போனது.

“நூலகம் போறேன்”
மீண்டும் கண்ணாடியை எட்டிப் பார்த்துவிட்டு “ம்..லைப்ரேரி..” என்றான். வலதுபக்கமிருந்தவன் ரவியை பார்த்தானே தவிர எதுவும் கேட்கவில்லை. பெரும்பாலானோர் போகாத இடத்திற்கு போவதாகச் சொன்னால் விசித்திரமாகத்தான் பார்க்கிறார்கள். ஒருவேளை டாஸ்மக்குக்கோ, வேசி வீட்டுக்கோ போகிறேனென்றால் மேற்கொண்டு பேசியிருப்பார்களோ என்று நினைத்துக் கொண்டான். இரண்டு நிமிட அமைதிக்குப்பின் மேத்தாநகர் பாதையில் திரும்பி வாகனம் நின்று கொண்டது. இவன் மட்டும் இறங்கிக் கொண்டான்.
வெள்ளை பலகை பேருந்திற்காக காத்திருந்தான். நிறுத்தத்தின் அருகே வலது புறமாக வெள்ளைச் சீருடையணிந்த பள்ளி மாணவர்களும் மாணவிகளும் பானி பூரி வண்டிமுன் நிற்க, எத்தனைபேர் நிற்கிறார்கள் தின்பதற்காக என்ற ரீதியில் ஒருவன் கணக்கிட்டான், அவன் கையில் நூறு ரூபாய் தாளை மடக்கி வைத்திருந்தான்.
இரு ஆசிரியைகள் நிறுத்தத்திற்கு வந்து நின்றார்கள். மாணவர்களிடத்தில் சலனமோ பணிவோ கிஞ்சித்தும் எட்டிப்பார்க்கவில்லை என்பது ஒருபுறம் நிற்க. இவர்கள் நூல் வாசிப்பார்களா, இவர்கள் பள்ளியில் நூலகம் இருக்குமா, மாணவர்களை வாசிப்பின் தளத்திற்கு அழைத்துச் செல்வார்களா என்று கேள்விகள் எழுந்தபோது, சனிக்கிழமை நூலகத்திற்கு சென்றது நினைவில் வந்தது.
சனிக்கிழமை விடுமுறை. இரண்டுநாள் தூக்கமின்மை மதிய உணவிற்கு பிறகு வாசிப்பின் இடையிலேயே படுக்கையில் கிடத்திவிட்டது அவனை. விழித்துப்பார்த்தபோது திறன்பேசியில் ஐந்து நாற்பத்தொன்பதென்று நேரம் காட்டியது. அருகில் தமிழ் இலக்கிய கட்டுரைகள் கவிழ்ந்து கிடந்தது. புத்தகத்தை எடுத்து வைத்துவிட்டு முகம் கழுவி கால்சராய் அணிந்து கொண்டான்.
வெங்கட் சாமிநாதனின் கலைவெளிப் பயணங்கள், உலகத்தமிழ் மாநாட்டில் வாசிக்கப்பட்ட தமிழ் இலக்கிய கட்டுரைகள் இரண்டு நூலையும் எடுத்துக் கிளம்பினான்.
அண்ணனிடம் சென்று “நூலகம் பேட்டு வாரேன்” என்றான்.
“ம்..” என்றான் தூக்க கலக்கத்தில், இரவு அலுவல் அவனுக்கு.
அன்று உடனடியாக பேருந்து கிடைத்தது, ஒருபொழுதும் இப்படி நடக்காது இன்று அரிதாக நிகழ்ந்திருக்கிறது. அதுவும் வெள்ளைப் பலகை பேருந்து.
ஐந்து ரூபாய் நாணயம் கொடுத்தான், நான்கு ரூபாய் சீட்டும் ஒரு ரூபாய் நாணயமும் திரும்பப் பெற்றான். சீட்டில் குன்றத்தூர் என்பதற்கு பதில் “குண்டத்தூர்” என்று அச்சாகியிருந்தது. தமிழையும் தமிழனையும் தமிழக அரசையும் நினைத்து சிரிப்பதை தவிர வேறொன்றும் செய்வதற்க்கில என்று சிரித்துக் கொண்டான்.
குன்றத்தூர் “அறுவத்தியாரு” பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நடக்க ஆரம்பித்தான். அறுவத்தியாரு அந்த வழியில் செல்லும் ஊர்ந்துகளின் எண்.
நேராக நடக்கத்துவங்கினால் சிவசிவ என்று எழுதியிருக்கும் கோபுரமொன்று பார்வையில் படும், அந்த தெருவிலேயே தெய்வச்சேக்கிழார் மணிமண்டபமும் இருக்கிறது. அதற்கு சிவனின் வாசல் வரை செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு முன்னரே இருக்கும் மணிமண்டபத்தினுள் நூலகத்திற்கு சிறு கட்டிடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. நூலகத்தின் பெயர் “கலைஞர் நூலகம்”.
ரவிக்கு இந்த கட்டிடமே முரண்பாடாகத் தெரியும். பகுத்தறிவாதிகளுக்கும் பகவானுக்கும்  சம்பந்தமில்லையென்றாலும் வாக்குகள் பொறுக்குவதற்கு அதை ஏற்படுத்திக் கொள்ளவேண்டியிருக்கிறது.

தெருவின் தொடக்கதிலிருந்தே வரிசையாக மின்கம்பத்தில் கட்டப்பட்ட ஒலிப்பெருக்கியில் மந்திரம்போல தமிழை உச்சரித்து படித்துக்கொண்டிருந்தது ஒரு முதியவரின் குரல்.
மணிமண்டபத்தின் வாயிலில் பத்துக்கு பன்னிரெண்டு அளவில் ஒரு வண்ணப்பதாகை, சாமியார் ஒருவருக்கு குருபூஜை என்று விளம்பரப்படுத்தப் பட்டிருந்தது. இரும்புக் கதவை கடக்கும் போது அதிகமான காலணிகள் கண்ணில் பட்டன. பொதுவாக நூலகத்திற்கு இவ்வளவு காலணிகள் வருவதில்லை.
அங்கிருந்தே நூலகத்தைப் பார்த்தான் வெளிச்சமிருந்தது ஆனால் சாளரம் சாத்தப்பட்டிருந்தது. அருகில் சென்று பார்க்கலாமென்று நகர்ந்தபோது முதலில் இருந்த கட்டிடத்தில் தெய்வச்சேக்கிழார் அமைதியின் வள்ளலாக அமர்ந்திருந்தார். அவர் மட்டுமே இருந்தார். இரண்டாவது அமைந்திருந்த தியான மண்டபத்தில் அந்த சாமியாரின் குருபூஜை நடைபெறுவதற்கான ஆயத்தங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன. அரங்கு நிறைந்திருந்தது.
அடுத்தது கலைஞர் நூலகம். திறந்திருந்தது. கையெழுத்து போட்டுவிட்டு உள்ளே நுழைந்தான். நூலகர் நாற்பது வயது மதிக்கத்தக்க பெண். வார மாத காலாண்டிதழ்கள் வாசகர்கள் மேசையின் மீது நீச்சலடித்துக்கொண்டிருந்ததை கரை ஒதுக்கினார்.
புத்தகத்தை அறையின் மையத்திலிருக்கும் நூலகரின் மேசையில் வைத்தபோது “க்ளோசிங் டைம் சார், பக்கத்துல திருவிழா நடக்கு, பூட்ட சொல்லிட்டாங்க” என்று ஒவ்வொன்றையும் தனித்தனியாக உச்சரித்துச் சொல்லிக்கொண்டே மேசை பக்கம் வந்தார்.
“அஞ்சே நிமிடம்” என்று சொல்லி உள்ளே புகுந்தான் ரவி.
ஒரு மின்விளக்கு தவிர மற்றவை அணைக்கப்பட்டிருந்தது. இரண்டு நிமிடம் கரைவதற்குள் “என்ன பன்றீங்க அங்க, திருவிழா நடக்கு, நாளைக்கு வாங்க” மீண்டும் ஒரு எச்சரிப்பு, இப்பொழுது அவரது குரலில் எரிச்சலிருந்தது.
இவனுக்கு இரண்டு புத்தகம் எடுத்துவிட வேண்டும் என்ற எண்ணம் மாறவேயில்லை. அட்டகத்தைப் பார்த்தான் பாரதிதாசன் எழுதிய இருண்ட வீடு புத்தகம் புலப்பட்டது. எடுத்துக் கொடுத்தான். அவசரமாக பதிவு செய்து திரும்பக் கொடுத்தார் அந்த அம்மா. 
“ இன்னொண்ணு எடுத்துக்கிறேன்  நாளை என்னால வர முடியாது மேடம்..” என்றான்.
"அதுக்கு நான் என்ன செய்ய முடியும்ங்க" வெளியே வா என்பதுபோல் கையை அசத்துவிட்டு கதவை இழுத்து மூடத்தொடங்கினார்.
இருண்ட வீடு அல்ல இருண்ட நூலகம் என்று நினைத்துக்கொண்டான். கோபம் சேக்கிழார் மீதும் அந்த பாடாவதி சாமியார் மீதும்.
தெய்வங்களெல்லாம் தொலைந்து போனாலென்ன என்றிருந்தது அவனுக்கு. கெட்டவார்த்தைகளை விழுங்கினான்.

நாளை வரமுடியாது திங்கள் கிழமை அலுவலகம் சென்று திரும்பியபின் வரவேண்டும். இவர் இன்று நடந்த அத்தனையையும் மறந்து போய்விட்டால் என்ன செய்வது. சரியாக குறிப்பெடுத்தும் வைக்கவில்லை. தானாவது ஒரு புத்தகத்தை வைத்துவிட்டு ஒன்றை எடுத்து வந்திருக்கலாமோ. என எண்ணங்களை ஒட விட்டுக்கொண்டிருந்தான்.
தெருவைக் கடந்தபோது, 
இறுதியாக அபிராமி அந்தாதியிலிருந்து சில பாடல்களை வாசிக்கிறேன் என்று அதே முதியவரின் குரல் ஒலிப்பெருக்கியில் ஒலித்தது.

இன்றும் வெள்ளைப்பலகை பேருந்தை பிடித்து குன்றத்தூர் வந்து சேர்ந்தால் தெருவின் கடைசியாகத் தெரியும் கோபுரத்திற்கு முன் மேடை அமைக்கப்பட்டிருந்தது. மேடையில், தனது புனைப்பெயரை அரசின் திட்டங்களுக்கு வம்படியாக வைத்துக்கொண்டிருக்கும் முதல்வர் பெரிய அளவில் தெரிந்தார். இதை சாக்குபோக்கு சொல்லி இன்றும் நூலகத்தை அடைத்து விடுவார்களோ என்று நினைத்து வேகமாக நடக்க ஆரம்பித்தான்.
மணிமண்டபத்திற்கு சற்று தள்ளிதான் மேடை அமைத்திருந்தார்கள். மேடையில் இரு பெரியவர்கள் தபேலா ஆர்மோனியப்பெட்டி சகிதம் அமர்ந்து சோதனை ஓட்டமாக “ட்டபட்தோம்…..ட்டபட்தோம்…” என அடித்துக் கொண்டிருந்தார்கள்.
இரும்புக்கதவை தாண்டும் போது காலணிகள் வெகு குறைவு, மூன்று நான்கு சோடி.
நூலகர் செய்தித்தாள் வாசித்துக்கொண்டிருந்தார்.
இரண்டு நாள் இடைவெளி விழுந்ததில் கோபம் முற்றிலும் குறைந்திருந்தது, ஒருவேளை மறந்துவிட்டு விதாண்டாவாதம் செய்தால் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணியிருந்தான்.
அருகில் சென்று “சனிக்கிழமை ரெண்டு புத்தகம் விட்டுட்டு போனேன்” தொடர்ந்து கூறுவதற்கு முன் தலையாட்டினார். பரவாயில்லை என்றிருந்தது. இன்னொரு புத்தகம் எடுத்து வந்து பதிவு செய்ய நின்ற போது ஒரு அட்டை இருந்தது, இன்னொரு உறுப்பினர் அட்டையை தேடியும் கிடைக்கவில்லை. புத்தகத்தை பதிவு செய்யத்தொடங்கும் போது, மண்டபத்தின் காவலர் வந்தார்.
இவன் நினைத்தது போலவே வந்தவர் “ஆறரைக்கெல்லாம் மூடிருங்க, மீட்டிங் நடக்குதில்லியா” என்றார்.
நூலகரைப் பார்த்தான், அந்த அம்மாவின் மூக்குக்கண்ணாடி வழியே சோகம், வெளிப்படுத்தமுடியாத கோபம் தெரிந்தது.
“அன்னைக்கும் இப்டித்தான் செஞ்சாங்க, இன்னும் பத்து நிமிசம் அப்புறம் வந்து கத்துவாங்க” என்றார்.

எதுவும் பேசாமல் அவரை பார்த்துக்கொண்டிருந்தான். "எப்டில்லாம் கத்துனாங்க தெரியுமா சார். எப்போ தனிக்கட்டடம் கொடுப்பாங்கன்னு தெரியல" என்றார் அவர்.

“உங்க உயரதிகாரி கிட்ட சொல்லுங்க” என்றான். வேறென்ன செய்ய முடியும். அரசுக்கு எழுதிப்போடுவதில் பிரச்சனைகள் தீர்ந்துவிடுமென்றால் ஏன் இப்படி இருக்கிறது. 

ஆண்டவனும் அப்படித்தான் ஆளுபவனும் அப்படித்தான்.

வெளியில் கட்சி ஆண்டுவிழா தொடங்கியது “ நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற" என்ற வே(வி)சப் பாடலோடு……..

நன்றி: மலைகள்.காம்

வியாழன், 26 நவம்பர், 2015

லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம்

31-Jul-2015 தேதியுடன் வட்ட வழங்கல் அலுவலக முத்திரையிடப்பட்ட பதிவுத்தாளில் குறிப்பிட்டிருந்த அலைபேசி எண்ணில் சரியாக 62-ஆம் நாள் தொடர்பு கொண்டபோது, “இன்னும் ரெண்டு வாரத்துக்கு அப்புறம் பேசுங்க” என்று மேற்கொண்டு எந்த விளக்கமும் இல்லாமல் இணைப்பை துண்டித்துவிட்டார் அந்த உயர்திரு அதிகாரி.

தமிழக அரசின் இணையதளத்தில் குடும்ப அட்டைக்கான விண்ணப்பம் பதிவிறக்கும் போது, விண்ணப்பிப்பதற்கான சில விதிமுறைகள் குறிப்பிலிருந்தது. அதில் ஒன்று 60 நாள் வரையில் அலுவலகத்தையோ அலுவலரையோ தொடர்பு கொள்ள வேண்டாம், இந்த நாளுக்குள் அலுவலர் ஒருவர் முகவரி மட்டும் குடும்ப தகவல் சேகரிக்க வருவார் அதன் மூலம் நம் விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளது என்பதை அறிந்துகொண்டு அறுபது நாளுக்கு பிறகு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்பது விதி. அதன் படி அழைத்தபோது தான் அதிகாரியின் பதில் மேற்சொன்னபடி அமைந்தது, இதில் வியப்பேதுமில்லை.

இரண்டு வாரத்திற்கு பின்னர் அழைத்தேன், “எந்த ஏரியாங்க” என்றதும்.
“குன்றத்தூர்” என்ற போது “குன்றத்தூர் ஆர்.ஐ ட்ட பேசுங்க” என்றார்.
இப்பொழுதாவது வாய் திறந்தாரே என்றெண்ணிக்கொண்டு எண்ணை குறித்துக்கொண்டேன். உடனே இவரை தொடர்பு கொண்டபோது.
“ஹலோ .. குன்றத்தூர் ஆர்.ஐ ங்களா”
“ஆங்
“நான் குன்றத்தூர்லயிருந்து பேசுறேன், குடும்ப அட்டைக்கு விண்ணப்பிச்சிருந்தேன்... எழுவது நாளுக்கு மேல ஆகுது..” முடிக்குமுன்
“ஆங் கொஞ்சம் நாள் ஆவுங்க… நேர்ல வாங்க பாக்கலாம்” என்றார்.

இரண்டு நாள் முன் காலையில் அவரை (ஆர்.ஐ) மீண்டும் அழைத்து அலுவலகம் வரலாமா என்பதை உறுதி செய்துகொண்டு கிளம்பினேன்.

வட்ட அலுவலகத்தை அடைந்தபோது 2:50 ஆகியிருந்தது. அலுவலகம் முழுக்க வெள்ளை வேட்டி சட்டையில் மக்கள் கூட்டம். சிலரின் அலசலான வெள்ளை சட்டைப் பையில் ஜெயலலிதாவும், சிலரின் பையில் ஸ்டாலினும் சிரித்துக் கொண்டிருந்தார்கள், கருணாவின் முகம் தேடினாலும் கிடக்கவில்லை. வட்ட ஆட்சியர் அலுவலகம் என்ற பெரிய பலகையின் கீழ் சிறிய பலகையில்  “லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம்” என எழுதப்படிருந்தது. எனக்கு சில வருடம் முன் தென்காசி அரசு மருத்துவமனையில் நிகழ்ந்த லஞ்சம் தொடர்புடைய நிகழ்வு நினைவில் வந்தது. பார்க்கலாம் ஆர்.ஐ என்ன சொல்கிறார் என்ற நினைப்போடு நகர்ந்தேன்.

மேற்சொன்ன தேதியில் எனது விண்ணப்பத்தை பெற்ற மனிதர் நின்றார், அவரிடம் காண்பித்தபோது. சில வினாடிகள் உற்றுப்பார்த்து பலத்த யோசனைக்கு பிறகு, கதவு வழியே உள்ளே எட்டிப்பார்த்தார்  “ஆர்.ஐ சாப்பிட போயிருக்கார் வந்ததும் பாருங்க” என்றார். சரிதான் என காத்திருந்தபோது அந்த அறைக்கதவின் அருகில் செவ்வக வடிவிலான அட்டை பெட்டியொன்று பலதரப்பட்ட விண்ணப்பத்தாள்களை நிரைத்துக்கொண்டிருந்தது. இவை வேலை முடிக்கப்பட்டதா நிராகரிக்கப்பட்டதா எனத்தெரியாமல், அருகிலிருக்கும் முகங்களை வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன்.

அறைக்கு உள்ளேயும் வெளியேயும் போவதும் வருவதுமாக ஒரு மூன்று பேர் திரிந்து கொண்டிருந்தார்கள். ஒருவரின் சட்டைப்பயில் ஸ்டாலின் சிரித்துக் கொண்டிருக்க மீதி இரண்டு பேரின் பையிலும் சின்ன சின்ன குறிப்பேடுகள் இருந்தன.  அவர்களின் செயல்கள் மூன்றாம் தர வேலை பார்க்கும் ஆட்கள் எனக் காட்சிப்படுத்தியது. அரசியல்வாதி தோரணையில் இருந்த ஆள் வெளியே வரும்போது அலைபேசியில் பேசிக்கொண்டே வருகிறார். யாருடைய குடும்ப அட்டை வழங்கலுக்காகவோ சிபாரிசுக்காக வந்திருப்பார் போலத்தெரிந்தது பேச்சு.
அறை வாசலின் வெளியே கனத்த மேசைக்குப்பின் கழுத்தில் கருப்புத்துண்டும், நெற்றியில் காலையில் வைத்த சந்தணப்பட்டை சகிதம் ஒருவர் முன்னால் நிற்கும் மக்களை பார்க்கும் போது வெறுப்புடனும், அலுவலர் எவரேனும் வந்தால் “வணக்கம் சார்” என கையை உயர்த்துவதுமாக அமர்ந்திருந்தார். வயதான அம்மா ஒருவர் தாள் ஒன்றை நீட்டும் போது, “இரும்மா என்ன அவசரம் ஒனக்கு” எனக் கத்தினார். நானும் ஒவ்வொரு வாரமா வந்து போறேன் என்று அருகிலிருப்பவரிடம் முணுமுணுத்தார் அந்த அம்மா. பெரியவர் ஒருவர் வெற்று காகிதம் ஒன்றோடு அந்த ஆளின் முன்னால் சென்று நிற்கவும் “ என்னய்யா வேணும் ஒனக்கும்” என்று ஆத்திரம் கொட்ட அவனின் இரண்டு கைவிரல்களையும் மடக்கிக் ஆட்டிக்கொண்டு வெறிபிடித்தது போல “ இப்போ மால போட்ருக்கேன்.. இல்லனா..ம்ம்ம்” என்று கத்தினான். பெரியவர் “உங்க நம்பர் எழுதுங்க” பொறுமையோடு கேட்டார். எழுதிக்கொடுத்துவிட்டு எழுந்து போய்விட்டான். அந்த அம்மாவும் இன்னும் சிலரும் அவனுக்காக காத்திருந்தார்கள். 

ஒருவேளை மாலை போடாமலிருந்தால் இவனால் என்ன செய்துவிட முடியும் என எனக்கு விளங்கவில்லை. யாருக்கு இவர்கள் வேலை செய்கிறார்கள் மக்களின் தேவைகளை நேரத்தில் நிறைவேற்ற துப்பில்லை வீண் ஆத்திரம் மட்டும் பொத்துக் கொண்டு வருகிறது. மக்களின் சாதுவான போக்கை இவர்களின் ஆற்றாமைக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

அறையின் உள்ளே ஆர்.ஐ வந்திருந்தார், அப்படிச்சொல்வதை விட அவர் கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தார் என்று கூறுவதுதான் உகந்ததாக இருக்கும். மூன்றரை மணிக்கெல்லாம் அலுவலகம் முடிந்துவிடும் போல(!). பையை தோளில் மாட்டும் போது பதிவு ரசீதை காண்பித்தேன். பார்த்தவர் “ இப்போதான் பன்னிரண்டு, பதிமூணே போகுது.. இன்னும் நாளாவும்” என்று கிளம்பினார். பின்னால் சென்று “பன்னிரெண்டு, பதிமூணுன்னா.. வருடத்தையா சொல்ரீங்க”ன்னேன். “ஆம்” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினார். அவர் எதற்காக சிரித்தாரோ அல்லது அது அர்த்தமற்ற வழக்கமான சிரிப்பாகக் கூட இருக்கலாம். நானும் சிரித்தேன் இதை காலையில் தொடர்புகொண்டபோதே தெரிவித்திருக்கலாமே என்று நினைத்துக் கொண்டு.

இவர் கிளம்பினதும் வேறொருவரிடம் கேட்கலாம் என்று காத்திருந்து மீண்டும் உள்ளே போனால் “பதினாலு இப்போதான் போகுது.. பதினாறுலதான் கிடைக்கு”மென்று கூறிக்கொண்டே பேனாவை எடுத்து என்னிடம் ஏற்கனவேயுள்ள ஆர்.ஐ யின் தொடர்பு எண்ணை பதிவு ரசீதில் எழுதிக் கொடுத்தார்.

பேருந்தில் வரும் வழியில் அங்கே நடந்த நிகழ்வுகளை அசை போட்டபோது என்ன தோன்றியதென்றால், விரைவாக கிடைக்க என்ன செய்ய வேண்டுமென ஒருவேளை நான் கேட்டிருந்தால் அங்கு குறிப்பேட்டுடன் நடமாடிக்கொண்டிருந்த இருவரில் ஒருவரை கை காட்டி கண்ணையும் காட்டியிருப்பார் அந்த ஆர்.ஐ, பன்னிரண்டிலிருந்து பதினைந்திற்கு வர குறைந்தபட்சம் ஆயிரம் கேட்பார்கள் என்று நினைக்கிறேன். கொடுத்தால் முடித்துத்தருவார்களாக இருக்கும். இல்லையென்றால் கட்சி மாவட்ட செயலாளர்களையோ அல்லது குறைந்தபட்சம் வார்டு கவுன்சிலரையாவது உடன் அழைத்துவந்தாலும் வேலையை முடித்துத்தர வாய்ப்பிருக்கின்றது. கவுன்சிலர் மட்டும் சும்மாவா வருவார், அவரென்ன இளிச்சவாயரா ஐநூறாவது தேற்றிவிட மாட்டாரா. 

அந்த ஆர்.ஐ "நேர்ல வாங்க பாக்கலாம்"னு கூறியதை நான் சரியாக புரிந்து கொள்ளவில்லையோ.

செவ்வாய், 24 நவம்பர், 2015

ஆரண்யம் (முதல் பாகம்) - வாசிப்பு

சத்தியசரண் வழக்கறிஞர் படிப்பை முடித்துவிட்டு, அதில் நாட்டமில்லாமல் வேறு வேலை தேடி கல்கத்தாவில் அலைபவன், துர்கா பூசையின் போது தன் கல்லூரி நண்பனை சந்திக்கிறான். கல்கத்தாவில் ஒரு ஜமீனின் மகனான அவன் தன் ஜமீனுக்கு சொந்தமான காட்டுப் பகுதியில் (ஜமீன் என்ற பெயரில் காட்டை குத்தகைக்கு விட்டு பணம் பார்த்திருக்கிறார்கள் நிலச்சுவான்தார்கள்) அலுவல்கள் கவனித்துக்கொள்ள திறமையான ஆள் வேண்டும், அந்த வேலைக்கு இவன் தகுதியாக இருப்பான் எனக்கூறி பணியில் அமர்த்துகிறான்.



இதுநாள் வரை கல்கத்தாவின் நகர் பகுதியில் தங்குமிடத்திற்கும் உணவுக்கும் அலைந்து திரிந்தவனுக்கு ஒரு வேலை கிடத்துவிட்டது.. பூர்ணியா எனப்படும் அந்த காட்டுக்குள் வந்து சேர்கிறான். அங்குள்ள மக்களோடு பழகுவதில் சற்று சிரமம் கொள்கிறான், அவர்கள் பேசும் மொழி அவர்களின் வாழ்வுமுறை இவனுக்கு நகர் வாழ்விலிருந்து முற்றிலும் புதிதாக இருப்பதை உணர்கிறான். இந்த அலுவலுக்கு தான் ஏற்றவன் அல்ல, திரும்பி கல்கத்தா செல்வதே சரியெனப்படுகிறது. நிலவு பொழியும் இரவும் காட்டுமலர்களும் அவனை கவர்ந்துவிடவும், அங்குள்ள மனிதர்களின் அப்பளுக்கற்ற பாசம் மற்றும் அவர்களது எதிர்பார்ப்பினமையற்ற வாழ்வும் ஈர்த்து விடுகிறது. வாழத்துவங்குகின்றான்.

இயற்கையோடு வாழத்தொடங்கியபின்னும் இலக்கிய ஆர்வம் கொண்ட அவனுக்கு புத்தகம் இல்லாமல் இருப்பது நகரத்து வாழ்வையும் புத்தகங்களுடனான வாழ்வையும் அவ்வப்போது அசை போட வைக்கின்றது.  

காட்டை பற்றி சத்தியசரண் வர்ணிக்கும் இடங்களெல்லாம் ரசனைக்குரியனவாக இருந்தாலும், அங்குள்ள மலர்களையும் பறவைகளையும், காட்டு மலர்கள் அழகாகயிருந்தன, காட்டு பறவைகள் அழகாக இருந்தன என மலர் மற்றும் பறவைகள் பற்றிய மேலதிக தகவல் இல்லாமல், குறைந்த பட்சம் பெயர் கூட இல்லாது வர்ணித்திருப்பது அவ்வளவு இயல்பாக இல்லை. பலாச மலர், தாதுப மலர் போன்ற சில பெயர்கள் அங்கங்கே எழுதபட்டிருக்கிறது.

தமிழில் மொழிபெயர்த்த நூல் என்பதாலோ என்னவோ மொழி நடையில் சோர்வு தட்டுவது போலுள்ளது, எனக்குத்தான் இப்படியிருக்கிறதா என்றும் தெரியவில்லை. ஆரண்யம் புத்தகத்தை நூலகத்தில் இதற்கு முன் பார்த்திருக்கிறேன் ஆனால் சாதாரணமாக கடந்து போனது ஏற்கமுடியாததாக உள்ளது இப்போது. இந்த முறை தேர்ந்தெடுக்க காரணம் கடந்தநாளன்று பார்க்கத்தவறிய இதன் அட்டைப்படம் தான்.
காடுகளில் வாழ்ந்த மனிதர்களை மைய்யப்படுத்தி எழுதப்பட்ட வங்க மொழியில் "ஆரண்யக்"காக வெளிவந்த புதினம், அங்குள்ள மனிதர்களை எடுத்தியம்பும் விதம் பாராட்டுதலுக்குறியது. காட்டுக்குள் வாழ்பவர்களானாலும் மனிதர்களுக்குள் சாதி வேற்றுமை, தீண்டாமைக் கொடுமைகள் இருக்கத்தான் செய்கின்றன.


சந்திக்கும் மனிதர்களையும், பயணம் போகும் காடுகள் பற்றியும், காட்டின் இரவு, பறவைகள், மிருகங்கள், கோடைகால தீ விபத்து, குளிர்கால நடுக்கம் என ஒரு நகரத்து மனிதனின் பார்வையில் காடுகளையும் அதன் உயிர்களையும் எழுத்து வடிவமாக மாற்றப்பட்ட புதினம் ஆரண்யம். 1937-1939 காலத்தில் விபூதிபூஷண் பந்தோபாத்யாய என்பவரால் எழுதப்பட்டது. தமிழில் 2001 ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது. பதேர் பாஞ்சாலி திரைப்படமாக உருவெடுக்குமுன் புதினமாக இவரால் எழுதப்பட்டதே.

சனி, 31 அக்டோபர், 2015

மழையும் வாழ்வும்

சாக்கடையும்
சகதியுமில்லாமல்
எழுதப்படும்
மழைக்கான கவிதை
இயல்பாக இருப்பதில்லை

ஞாயிறு, 25 அக்டோபர், 2015

சோழமண்டலம் கலைஞர்கள் கிராமம்

சென்னைக்கு வந்து நான்கு வருடங்களாகின்றது, சோழமண்டல கலைஞர்கள் கிராமம் என ஒன்று இருப்பதை இரண்டு வருடத்திற்கு முன் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் இணையதளத்தில் ஒரு கட்டுரையை வாசித்தபோதுதான் அறிந்துகொண்டேன். அப்போதிருந்து போகவேண்டும் என்ற எண்ணம் ஏற்படும் போதெல்லாம் கூகிள் வரைபடத்தில் அதன் இருப்பிடத்தையும் திருவான்மியூரிலிருந்து எப்படி போவதென்றும் பார்த்துக்கொள்வேன். தாம்பரத்திலிருந்து எப்படி சென்றுவருவதென்று கடந்த இரண்டு வருடங்களாக பார்த்துக்கொண்டிருந்தேன். இந்த காத்திருப்பிற்கும் எதிர்பார்ப்பிற்கும் உகந்த நாளாக இன்று அமைந்துபோனதில் அகம் குளிர்ந்துபோனதென்னவோ உண்மை.

கலைஞர்கள் கிராமம் என்றதும் வீடு போன்ற குடில்களில் அல்லது கட்டிடங்களில் உள்ளவர்கள் படம் வரைந்து விற்பனைக்கு வைத்திருப்பார்கள். மேலும் அங்குள்ளவர்கள் எப்போதும் எதையேனும் வரைந்து கொண்டே இருப்பார்கள் என்றே ஒரு கற்பனை பிம்பம் உருவானது. பின்னர் இணையத்தில் தகவல் திரட்டும்போதுதான் பிரபல இந்திய ஓவியர்களின் வரைபடங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் அருங்காட்சியகம் என தெரிந்து கொண்டேன்.

கடந்த வாரம் உலக நவீன ஓவியங்களை பற்றி இணையத்தில் தேடிக்கொண்டிருக்கும் போது www.metmuseum.org என்ற இணையதளம் ஒன்று அகப்பட்டது. அனைத்துலக நாடுகளின் வரலாற்றுக்கு முந்தய, ஆரம்ப மற்றும் சமகால ஓவியங்களை பற்றிய பல அரிய தகவல்கள் கிடைக்கப்பெற்றன. முழுமையாக படிக்க முடியவில்லையென்றாலும், அது அவ்வளவு எளிதான செயலல்ல என்பதை மறுக்க இயலாது. இந்தியாவை பற்றி வாசிக்கும் போது, ஓவியங்களைப் பொறுத்தவரையில் ஒரு நீண்ட பாரம்பரியம் இல்லை என்று தெரிகிறது, பல படையெடுப்புகளை ஏற்றுக்கொண்டு வெவ்வேறு விதமாக இடிபாடுகளுக்கிடையில் வளர்ச்சி அடைந்திருக்கிறது . இதை வெங்கட் சாமிநாதனின் கலைவெளிப் பயணங்கள் கட்டுரை நூலில் தெளிவாக விளக்கியிருப்பார்.

ஒருவேளை வாசிக்கப்படாமல் இருக்கும் சிந்துச்சமவெளி எழுத்துக்கள் போல, இன்னும் கண்டறியப்படாத கற்சிற்பங்களும், பாறை ஓவியங்களும் எங்கேனும் புதைந்தோ அல்லது புதைக்கப்பட்டோ இருக்கலாம்.



இந்த தளம் கண்டடந்த பின்னர்தான் சோழமண்டலம் செல்லவேண்டும் என்பதை உறுதி படுத்திக்கொண்டேன், சென்ற வாரமே சென்றிருக்க வேண்டியதுதான். அதற்கு முன் முகநூல் Chennai Weekend Artists (https://www.facebook.com/groups/ChennaiWeekendArtists/) குழுவைச் சார்ந்த ஓவியர் முரளி (https://www.facebook.com/events/478430492339182/) வரும் வாரத்தில் அவரது கலைப்படைப்புகளை Game Bigins என்ற பெயரில் கண்காட்சியாக வைக்கப்போவதாக அறிவிப்பு வந்தது, இவரோடு ஞாயிறன்று மொத்த குழுவினரும் அங்கே கூடுவதாகவும் தகவல் கிடைத்தது. ஒரே கல்லில் மூன்று மாங்காய் என்று நினைத்துக் கொண்டேன்.



காலை 11.30 க்குள் இடத்தை அடந்துவிட்டேன். அருங்காட்சியகத்தில் சமகால ஒவியங்களில் சிலவற்றை பார்வையிட்டேன், இங்கே அதிக நேரம் செலவழிக்கவில்லை. Game Bigins பக்கம் படியேறிவிட்டேன். இரண்டே படிகள் தான் அதிகமில்லை.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு பற்றி அறியாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன். சீறீப்பாயும் காளைகள்தான் இந்த கண்காட்சியின் நாயகர்கள், இவைகளை அடக்கும் மனிதர்கள் அற்புதமாக காட்சிப்படுத்தப் பட்டுள்ளார்கள்.

அரங்கத்தின் உள் வலதுபக்கம் சிறு சிறு சட்டகங்களில் சீறும் காளை பல கோணங்களில் வரையப்பட்டுள்ளது மிகவும் கவரும் தன்மையில் இருந்தன. இப்போது இடது பக்கத்திலிருந்து தொடங்கினேன். கரிக்கோல் மற்றும் நீர் வண்ணங்கள் கொண்டு வரையப்பட்ட படங்கள் அழகாக இருந்தாலும், அதற்கடுத்தாற்போல் இருந்த Acrylic on Canvas வகை ஒவியங்கள் என்னை மிகவும் கவர்ந்தன. இரண்டு மூன்று என எத்தனை முறை வேண்டுமானாலும் மிகவும் சேர்த்துக் கொள்ளுங்கள், அத்தனை அழகும் தினவும் கூடிய ஓவியங்கள்.

திமிரும் காளையின் முகம் அதன் இரு கொம்பிலும் அதை அடக்கும் வீரனின் கைகள் மற்றும் வலது தோள் மட்டும் தெரியும் விதத்தில் வரைந்திருப்பார். முழுவதும் பார்த்து முடித்தபின்னர் மீண்டுமொருமுறை இறுதியாக அதை மட்டும் பார்த்துவிட்டு இல்லை தொட்டுப்பார்த்துவிட்டு வந்தேன். அதற்கடுத்ததில் தினவுகொண்ட வீரனின் தோள்கள் மீது காளையின் முகம் இடது பக்கம் திரும்பியதுபோலிருந்த ஓவியமும் அட்டகாசமாக இருந்தது.

Mixed Media என்ற பிரிவில் சில படங்கள் காட்சியில் வைக்கப்பட்டிருந்தது. காளைகள் போட்டிக்கு முன்னர் வரிசையாக நிற்பது போன்றதொரு வரைபடம் ஊதா வண்ணத்தின் ஆதிக்கம் அதிகமிருந்து ஆர்வத்தை அதிகரித்தது. காளையின் ஒற்றைக்கண் மட்டும் வரைந்திருந்தது திடமான கவிதை. இந்த வகையிலிருந்த மற்ற படங்களும் மிகச்சிறப்பாக வரையப்பட்டிருந்தது. மனிதர் அதிகமாக உழைத்திருக்கிறார்.

மரத்தின் கிளைகள் மீது சிறுவர்கள் ஏறி நிற்பதும், அமர்ந்திருப்பதுமாக உள்ள ஓவியம் சில பசுமையான பழைய நினைவுகளை கிளரிவிட்டது.

காளையை அடக்குவது போன்ற கரிக்கோல் வரைபடங்கள் மிக அருமையான வடிவமைப்பு. காளைகள் துள்ளி குதிக்கும் போது காணும் திமிலை பார்த்துக்கொண்டே இருக்கலம்.

இறுதியாக எனது பெயரையும் அந்த குறிப்பேட்டில் எழுதிவைத்துவிட்டு வெளியில் வந்தேன். குழுவினர் அவர்களது காகிதங்களுக்கும் உயிர் கொடுக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். எனக்கு ஒருவரின் ஓவியத்தை பார்த்தாலும் அது தொடக்கம் முதல் இறுதிவரை அவரது கோட்டின் அழுத்தங்களை பார்த்துவிட வேண்டுமென்று நினைத்தேன். அப்படி ஒருவர் சிக்கினார். பார்த்துக்கொண்டே இருந்தேன் படம் பிடிக்க மறந்துவிட்டேன். அதனால் அவர் வரைந்த அந்த கற்சிற்பத்தின் ஒளிப்படத்தை இணைத்துள்ளேன்.



Pastel வகை ஓவியங்கள் வரைவதை முதல் முறையாக நேரில் பார்த்தேன், அவரின் பெயர் சங்கர் என்றறிந்தேன். அவரது காகிதமும் விரல்களும் வண்ணமாகி எழில் பெற்றதை அடிக்கடி அருகில் சென்று பார்த்துக்கொண்டேன். 


இடையிடையே மற்ற அன்பர்களை நோட்டமிட்டுக் கொண்டே இருந்தேன். நீர் வண்ணக்கலவையில் ஒரு நண்பர் கிராமத்தின் உள்பக்க பார்வையில் வரைந்திருந்த முகப்புத்தோற்றம் பச்சை வண்ணச்சிதறல்களில் மிளிர்ந்தது. இதே வகையில் இன்னும் இரண்டுபேர் வரைந்திருந்த ஓவியம் மிகச்சிறப்பாக இருந்தது. அதிலொருவர் ஊதா வண்ணங்களை உபயோகித்து முற்றிலும் வேறுபட்டதொரு சாயலை உருவாக்கியிருந்தார்.





அத்தனை பேரும் அவரவர் பங்களிப்பை கொடுத்து, இறுதியில் அதை விமர்சித்துக் கொள்கிறார்கள். மிக அழகான குழு. என்னை அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை என்றாலும் அவர்கள் எனக்கு அறிமுகமானதில் மிக மகிழ்ச்சியுடனே அங்கிருந்து கிளம்பினேன்.


நீங்களும் சென்று பார்த்து வாருங்கள் 27ஆம் தேதி வரை நடைபெறுகிறது.


சனி, 24 அக்டோபர், 2015

ட்ராயிங் வெளாடலாமா

வந்ததும் “மாமா ட்ராயிங் வெளாடலாமா” ன்னான், அவன் வரைவதென்பதை விளையாட்டாகவே கருதி வருகிறான். வெளியிலிருந்தால் திறன்பேசியில் வரைவதும், வீட்டிலிருந்தால் கரிக்கோல் மற்றும் வெள்ளைக் காகிதம் கொண்டும் அமர்ந்துவிடுவான். நெடுநாள் கழித்து இன்று வீட்டுக்கு வேறொரு
நோக்கில் வந்தவன் அப்படிக் கேட்டான். கரிக்கோலும் காகிதமும் கொடுத்து வரையச் இல்லை விளையாடச் சொன்னேன்.


நடு அறையில் தொலைக்காட்சியின் முன் சென்று அமர்ந்து கொண்டு வரையத்தொடங்கினான். எனது வேலையை முடித்துவிட்டு அறையில் வந்தமர்ந்து அருகில் அழைத்துக்கொண்டேன். காகிதத்தை பார்த்தபோது அதில் ஒரு வீடு உருவாகியிருந்தது.

சனி, 17 அக்டோபர், 2015

மாலைப்பொழுதின் நிறம் - சிறுகதை

கவிதைத் தொகுப்பின் மூன்றாவது கவிதையை வாசிக்கும் போது புத்தகம் மெல்லிய நடுக்கத்திலிருந்தது கைகளின் உதவியோடு. இதேபோலத்தான் முகநூலின் பதிவுகளை வாசித்தும் வாசிக்காமலும் கடந்து போகும் போது ஒரு படபடப்பு ஏற்படும். ஏன் ஏற்படுகிறது, வாசிப்பு என்பது இல்லாமல் நேரத்தை விரயமாக்கிக்கொண்டு நகர்ந்து போவதனால். கவிதை வாசிக்கப்படுகிறதே பிறகு ஏன் நடுக்கம்? கவிதை என்பது மனஓட்டங்களால் கட்டி இறுக்கப்பட்ட எதுவோ ஒன்று, எதுவிமில்லாமல் இருப்பவனிடம்  வெயிலை முற்றிலும் இழந்துவிட்ட மாலைப்பொழுதின் நிறம் ஏற்படுத்தும் படபடப்பு. இனி இப்படி இருப்பது தவிர்க்கமுடியாத சிலவற்றை ஏற்கும் சூழலை உருவாக்குமென்ற எண்ணம் எழுந்ததால். வெளியே கிளம்பத் தயாரானேன்.

யாரும் வீட்டில் இல்லை, அவள் இருந்திருந்தால் எதையாவது கேட்டுக் கொண்டேயிருப்பாள். இல்லாமலிருக்கும் போதும் கேட்பாள் அலைபேசி வழியாக “ நான் இல்லன்னொண்ணே சந்தோசமா யிருக்கியளோ “. எப்போதும் இது தவறாமல் ஒலிக்கும். வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே வந்தேன். சிமெண்ட் தரையெங்கும் மணல் வழக்கத்திற்கு அதிகமாகவே சேர்ந்திருந்தது. இதற்கும் அவள் இல்லாததற்கும் நிச்சயம் தொடர்பு உண்டு.

தெருவில் இறங்கி நடக்கும் போது மேற்கே திரும்பிப் பார்த்தால், வானம் கொஞ்சம் செம்பழுப்பு பூசிக்கொண்டிருக்கும். ஏதாவதொரு மிருகத்தின் சாயல் தெரியும் பெரும்பாலும் குதிரை, இன்று வாயைப் பிளக்கும் நாய் போன்றதொரு உருவம். நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை எது என்று. மழை பெய்தால் சிறு சிறு குளங்களில் வானம் அழகு காட்டும். இன்று மழையில்லை வெறும் பள்ளங்கள். வெறுமை அல்லது தெருவின் உடற்புண். தார் கொண்டு அழகு பூசாத முகம் என்று கூட சொல்லலாம். தேசப்பிதாவின் பெயர் கொண்டதாலோ என்னவோ தார் பூசிவிட அலுவலர்களும் அரசியல்வாதிகளும் பெருத்த யோசனையில் இருப்பது போலவே தெரிகிறது. பெயரை மாற்றுவதற்கு ஒரு மனுவைக் கொடுத்துவிடலாம் என்று நினைக்கிறேன். சாத்தியமா எனத் தெரியவில்லை. தார் பூசினால் மழைக்காலத்தில் சாலையெங்கும் ஜனநாயகம் பல்லிளிக்கும் என்பது மட்டும் தெரியும்.

எனக்குத் தெரியும் அவன் கடை வாசலில் இருப்பான் என்று, இருந்தான். புன்முறுவல் செய்தேன். எப்பொழுதும் தலையாட்டிச் சிரிப்பான், இன்று பார்க்காததுபோல் பார்த்து புன்முறுவல்தான் செய்தான். சிரிப்பை எதிர்பார்க்கவில்லைதான், ஆனால் அவனின் மாற்றத்திற்கு சமாதானம் கொள்ளுமளவு காரணமுண்டு. இந்த மாதம் முடிதிருத்த வேறு கடைக்குச் சென்றேன். எல்லாம் ஒன்றுதான் இவன் கத்தியில் கவனம் இல்லாதவன், இன்னொருவனுக்கு சீப்பில். கத்திக்கு சீப்பு தேவலை என்பது என் எண்ணம். மேலும் சில நேர்மையான காரணமும் உண்டு.

எல்லாமே கிடைக்கும் இவரது கடையில் நான் கேட்பதைத் தவிர, அதனால் பால் மட்டும் வாங்கச் செல்வதுண்டு. விரல்கள் இல்லாத கைகளின் உதவியோடு பாலை குளிர்சாதனப் பெட்டியிலிருந்து எடுத்து தருவார். சக்கரை வியாதிக்காரர் என நினைத்துக் கொள்வேன். இப்போது கால்களிலும் கட்டு போட்டிருக்கிறார். “அங்க போயி எதும் வாங்காத“ என்பாள். அவளுக்குத் தெரியும் தனக்கும் வயது போகுமென்று, இருந்தாலும் சொல்வாள். மனிதன் இப்படித்தான் சிந்திப்பான். காரணத்தை ஆழ்ந்து யோசனை செய்யத் தெரியாமல் புறத்தோற்றத்தில் மயங்குவான் இல்லையென்றால் பயப்படுவான். அது அவனைத் தற்காலிக வெற்றியில் களித்திருக்க உதவி செய்யுமேத் தவிர வேறொன்றுமில்லை என்ற பிரக்ஞை கிடையாது. இவளும் அப்படித்தான். இவரும் அப்படித்தான் பிறர் பற்றிய உணர்வற்றவர்கள். இந்த சமூகக் கட்டமைப்பே அப்படிப்பட்டதுதானே.

வீட்டுக்குள்ளிருக்கும் போது இருண்டது போல் காட்சியளித்த வானம், இப்போது சற்று வெளிச்சமாகத் தெரிகிறது. கண் இருட்டிற்கு மட்டுமல்ல வெளிச்சத்திற்கும் பழக்கப்பட வேண்டும் போலப் புரிகிறது.

கவலைப்படுவதற்கு வேண்டுமானால் தினமும் இருபது நிமிடம் செலவழித்துக்கொள் என்று எங்கேயோ வாசித்தது நினைவில் வரும்போது திடலை நெருங்கி இருந்தேன். மனதைத் தொலைப்பது எப்படி என்றொரு கேள்வி?. கேள்வியோடு அருகிலிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தேன், வெயிலும் அங்கே ஓய்வில் இருந்ததை உணர முடிந்தது. அரைமணி நேரம் தாங்காதா உனது பின்பக்கம் எனும் துணைக்கேள்வி வேறு.

தலைக்குமேல் கொடூரமான பழகிப்போனதொரு பெருத்த சத்தத்தோடு, உண்மையிலேயே விமானமொன்று பறக்கத்தான் செய்தது. மனதைத் தொலைக்கும் கேள்வியை அதில் ஏற்றி விட்டுவிட்டு பார்த்துக் கொண்டிருந்தேன், அதன் வேகத்தைப் பொருத்து அதன் அளவு குறைந்தது போலவே தன் போலியான நிறத்தை விடுத்து பொதுவான நிறத்தை பூசிக்கொண்டு துகள் அளவுக்கு சிறுத்தது. அதற்குமேல் இல்லாமல் போனது. அது தொலைந்து போனது என்றுதான் என்னால் சொல்லமுடியும்,
அருகில் அலோபதி, சித்தா என்று விவாதிக்கும் வயோதிகக் குரல்கள் இரண்டு புலனுக்கு எட்டியது. டாக்டருக்கு தொண்ணூத்தி ரெண்டு வயசு பத்மஸ்ரீ அவார்டு வாங்கியிருக்கார் என்று தொலைக்காட்சி விளம்பரம் போல் ஒருவர் பேச இன்னொருவர் கேட்டுக் கொண்டிருந்தார். மீண்டும் வானைப் பார்த்தேன், தொலைந்து விட்டதே என்று நினைக்கும் போது பின்பக்கம் சுட்டது எழுந்துவிட்டேன்.

http://malaigal.com/?p=7402


நன்றி 
மலைகள்.காம்

வியாழன், 8 அக்டோபர், 2015

சுந்தர ராமசாமி - கற்றலின் வழி

ஒருகதையோ, கவிதையோ, கட்டுரையோ வாசித்தால் அதன் கருத்துகளை உள்வாங்கிக் கொள்ளுமளவிற்கு, அந்த எழுத்துக்களை வார்த்தைகளின் பயன்பாட்டை, அளவுகளை எளிதாக உள்வாங்க இன்னும் கற்றறியவில்லை. அது தவறு என்றும் சொல்லிவிட முடியாது  தீவிர வாசிப்பின் இரண்டு வருடங்கள் வெகுவான எழுத்தாளர்களின் எழுத்துக்களை என்னிடம் அழைத்துவந்திருக்கிறது. ஒன்றிலிருந்து இன்னொன்று அதிலிருந்து மற்றொன்று என இடைவிடாமல் தொடரும் பயணங்கள்  எவரின் எழுத்தையும் முழுமையாக கற்றுணராமல் வைத்திருந்தாலும், எழுத்துகள் என்னிடம் என்ன பேச முயற்சி செய்கிறது என்பதை புரிந்து கொண்டு வாசிக்க முடிகிறது.


இறந்த காலம் பெற்ற உயிர் என்ற கட்டுரை நூல் சுந்தர ராமசாமி அவர்கள் எழுதியது. இவரின் புளியமரத்தின் கதை, ஜே.ஜே சில குறிப்புகள் மற்றும் இந்த கட்டுரைத் தொகுதியையும் வாசித்திருக்கிறேன். ஜே.ஜே வை வாசிக்கும் போது எழுத்தின் வேகத்திற்கு ஈடு கொடுக்கமுடியாமல் கருத்துகளை புரிந்துகொள்ள சில இல்லை பல வரிகளை மீண்டும் மீண்டும் வாசிக்கவேண்டியிருந்தது. விழுமியங்கள் நிறைந்து கிடக்கும் வரிகளின் ஓட்டம் சற்று வேகமாகத்தானிருந்தது. ஒரே எழுத்தாளரின் மூன்று நூல்கள் வாசித்தது இவருடையது மட்டுமே, இது திட்டமிட்டு வாசித்ததுமில்லை கையில் கிடைத்ததை வாசித்தது. புளியமரத்தின் கதை வாசிப்பதற்காக அண்ணா நூலகம் நோக்கி ஞாயிறு தோறும் ஒடியது நினைவில் வருகிறது.(கையில் கிடைத்தபின் ஓடிவர வைத்தது.) எதையெதையோ வாசிக்க வேண்டும் எல்லாமும் அறிய வேண்டுமென நினைத்தாலும். எல்லாமும் சாத்தியமாவதில்லை. அதுதான் உண்மை.

இவரது தமிழகத்தில் கல்வி என்ற நூலை வாசிக்கவேண்டும்.

ஆர்ப்பாட்டமில்லாமல் சகோதரனாக நண்பனாக அரவணைத்துச் செல்லும் இவரது எழுத்துக்கள் கற்றுக்கொடுப்பவை அளவீடுகள் அற்றது. இதைத்தவிர எதுவும் சொல்லத்தெரியவில்லை.


கற்றது கையளவு கல்லாதது உலகளவு.... பொய்யாக மாற்றம் காணமுடியாத உண்மை இது.

வியாழன், 1 அக்டோபர், 2015

விகடனுக்கு ஒரு திறந்த மடல்

ஜூனியர் விகடனில் பெரியோர்களே தாய்மார்களே என்ற தொடர் கட்டுரையை ப.திருமாவேலன் எழுதி வருகிறார். இது ஒலிப்பதிவாகவும் வெளிவந்து கொண்டிருக்கின்றது, சில பதிவுகளை நண்பர்கள் குழு வழியே வாட்சப் பகிர்தல் மூலம் கேட்டிருக்கிறேன்.
இந்த வாரத்திற்கான புத்தகத்தில் தமிழர்களின் வரலாற்று தொன்மங்களை பற்றி பேசியிருக்கிறார். தமிழக வரலாற்று நூல்கள் மூலம் நாமறிந்த அல்லது அறிந்திருக்க வேண்டிய இலக்கிய மேற்கோள்களையும் கூடுதல் தகவலாக, மதுரை கீழடியில் தென்னந்தோப்பின் அடியில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் செங்கற்களாலான நம் முன்னோர்கள் வாழ்ந்த கட்டிடம் பற்றியும் எழுதியிருக்கிறார்.
தமிழ், தமிழினம் என்று பேசுபவரெல்லாம் குறிப்பிட்ட அரசியல் கட்சி அல்லது இயக்கம் சார்ந்தவன் என்ற எண்ணம் தமிழ் மக்களிடையே இருந்து வருவதிலும், மேலும் கீழடியில் கண்டடைந்த நம் தொன்மத்தைப் பற்றி தமிழக அரசு எந்த நிலைப்பாடுமற்று உறங்குவதைக் காண்பதிலும் அறச்சீற்றம் தெரிகிறது.
பல மாநிலங்களில் இந்தியும் ஆங்கிலமும் , ரோமன் எண்களும் இல்லா பேருந்துகளும் ரயில் நிலையங்களையும் கூறினார் அதில் மகராஷ்டிராவையும் சேர்த்திருக்கலாம்.
இப்படியொரு கட்டுரை வெகுஐனப் பத்திரிக்கையான விகடனில் வந்திருப்பது மகிழ்ச்சி. ஆனாலும் இதை வாசித்து முடித்ததும் விகடனின் டைம்பாஸ் என்ற இருட்டு மூத்திரச் சந்து நினைவில் வருகிறது. இப்படி என்போல் எண்ணுவோர் எத்தனையோ அறியேன்.
ஒருபக்கம் இதோபதேசங்கள் செய்துவிட்டு மறுபக்கம் வக்கிரபுத்தியைக் காட்டுவது வெறும் பணம் புரட்டும் பத்திரிக்கை வாதமாகத்தான் தெரிகிறது. தமிழ்சினிமா கதாநாயகன் போன்றவர்கள் நீங்கள். அது உண்மையும் கூட. நீங்கள் இத்தனைகாலம் எழுதியும் விழிப்புணர்வு ஏற்படுத்தாமல், கொசுக்கடியில் தூங்கும் தமிழனை சுகமாக சொரிந்து விடும் உங்கள் நரித் தந்திரம் நாங்கள் அறிவோம்.

திங்கள், 28 செப்டம்பர், 2015

தொலைந்துவிட்டது என்பார்கள்

ஒரு அம்மா, சிறு பையன் ஒருவனை கையில் பிடித்துக்கொண்டு சாப்பிட காசு இல்லை ஏதாவது உதவி செய்யுங்கள் (என் ஊகத்தின் அடிப்படையில்) என்ற வார்த்தைகளை பேசிக்கொண்டே இருக்கும் போது, அவரது கை அனிச்சை செயல்போல வயிற்றையும் அந்த சிறுவனின் முகத்தையும் தடவித் தடவி முன் நிற்கும் இருவரையும் நோக்கி நீட்டுவதும் மடக்குவதும் தொடர்ந்தது. சற்று தொலைவிலிருந்து கவனித்துக் கொண்டே அவர்களை கடந்து போனேன். அநேகம்பேர் இப்படியான காட்சிகளை கண்டிருக்க வாய்ப்புண்டு. சிலர் நின்று காசு கொடுத்திருப்பீர்கள் இல்லை கையை உதரிவிட்டு நகர்ந்து போயிருப்பீர்கள்.

அப்போது நான் தரமணியிலிருக்கும் கானகம் பகுதியில் வசித்து வந்தேன். அடையார் புற்றுநோய் மருத்துவமனை நிறுத்தத்தில் இறங்கி நடந்து செல்வது வழக்கம். அப்போது அந்த வழியில் சிற்றூந்து கிடையாது என்பதை கூறிவிடுகிறேன். ஐஐடி வளாகத்தின் முகப்பை அடுத்து மூத்திர நாற்றமெடுக்கும் முக்குச்சுவரை  கடந்தால் மேற்சொன்னபடியான காட்சிபோல மூன்றுபேர்ஒரு பெண், சிறுவன் மற்றும் சிறுவனின் அப்பா போன்ற ஒரு ஆண் நின்றார்கள்.என்னை மறித்த அந்த ஆண் பிஸ்கட், ரொட்டி என்று வாயிலும் வயிற்றிலும் கைவைத்து காட்டிக் கூறினான். எனக்கு மொழி தெரியாது என்ற உணர்வை  ஏற்படுத்திவிட்டதில் அவன் கண் சோகத்தை அதிகமாக விவரிக்கத் தொடங்கியதை என்னால் உணர முடிந்தது. சந்தேகத்துடனே சட்டை பையிலிருந்த முப்பது ரூபாயை கொடுத்துவிட்டு எதுவும் பேசாமல் நகர்ந்துவிட்டேன்.

இரண்டு நாள் கழித்து அதே இடத்தில் வேறொரு குடும்பம் வழிமறித்தார்கள். வழிப்பறி செய்கிறார்கள் என்று இந்த இடத்தில் கூறவிரும்பவில்லை. அவர்களின் செய்கைக்கு பதில் செய்கையாக பையை காண்பித்து கையை விரித்துவிட்டு கடந்து போனேன். அடுத்தடுத்து இடைவிட்ட நாட்களில் வேறுவேறு குடும்பம் போன்ற ஒரு குழு இப்படி நிற்பது வாடிக்கையாக இருந்தது. இவர்கள் இப்படி நிற்பதற்கான விளைவுகளை ஏற்படுத்தியவர்கள் யாராக இருக்கும். அவர்களின் உறவுகளையோ, அரசையோ குறை கூறுமுன் அவர்களிடம் உழைப்பதற்கான அத்தனை கூறுகளும் இருப்பதை ஒத்துக் கொள்ளவேண்டியிருக்கிறது, அந்த சிறுவர்களைத் தவிர்த்து.

மற்றொரு நாள் டைடல் பார்க் நிறுத்தத்தில் இறங்கி திருவான்மியூர் நோக்கி நடந்து கொண்டிருந்தேன், கருப்பு கால்சராய் வெள்ளைச்சட்டையோடு தொப்பையையும் அணிந்துகொண்டு ஐந்தரையடி உயரத்தில் ஒரு ஆள் தன் இரண்டு கையையும் விரித்து என்னை மடக்கினார் நான் அவசரத்தில் இருந்ததால் அவரை கண்டுகொள்ளவில்லை ஆனாலும் விடாமல் மறுபடியும் பின்னல் வந்து முன்னால் மறித்தார். என்னோடு நடந்து கொண்டே  " பர்ஸ தொலச்சிட்டேன், தம்பிக்கு எந்த ஊரு, கொஞ்சம் உதவி பண்ணணும்" என்றார். நான் நின்றேன் "எந்த ஊர்" எனக் கேட்டதும் ஆலங்குளம் என்றார். 

ஆலங்குளம் என்றதும் சிலர் நினைவில் வந்தார்கள். அவரிடம் எதுவும் கேட்காமல் பார்த்துக்கொண்டே நின்றேன். "அக்கவுன்ட் நம்பர் குடுங்க திரும்ப அனுப்பி வைக்கிறேன்" என்றார். "அதெல்லாம் முடியாதுங்க" என்று கையை ஆட்டிவிட்டு நகரும் போது மீண்டும் மறித்தார். அந்த நேரத்தில் நூறு ரூபாயா இருக்க வேண்டும் சட்டைப் பையில், கொடுத்துவிட்டேன். "இன்னும் இருநூறு ரூபாய் குடுப்பா பஸ்ல போயிருவேன்" என்றதும் நான் நிற்கவேயில்லை வேகமாக நடக்க ஆரம்பித்தேன். கிடைத்தது போதுமென அவரும் வேறொருவரை தேடுவதுபோலத் தெரிந்தது. திரும்பிப் பார்த்துவிட்டு நடந்தேன்.

எனது கண்ணிலும் மனத்திலுமிருந்து நூறு ரூபாய் அகலவேயில்லை, பணம் மொத்தமும் தொலைந்த பின்னும் ஐநூறு கொடுத்து பேருந்தில் போகவேண்டுமென்று ஏன் நினைக்கிறான், ரயிலில் போனால் நூற்றி நாற்பெத்தெட்டு (சில வருடம் முன்) தான் ஆகும், பேருந்தை விட விரைவாகவும் சென்று விடலாம். மேலும் நான் ஊருக்கு போனால் பதிவு செய்யப்படாத ரயில் பயணம்தானமென்று யோசனையோடே நகர்ந்து கொண்டிருந்தேன்.

பின்னொரு நாள் இரவு வேலை முடித்து ஈக்காட்டுத்தாங்கல் பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் போது ஒரு ஆள் வந்து "எக்ஸ்க்யூஸ்மி வேர் ஆர் யூ கோயிங் " என்றார். யோவ் தமிழ்ல பேசுயா என்பதுபோல் கொட்டாவியோடு அவரை பார்த்தேன். "எங்க போரிங்க சார்" என்றார். "தாம்பரம்" என்றதும், "ஊரப்பாக்கம் எப்டி போறது" எனக் கேட்டார். "கூடுவாஞ்சேரி பஸ்ல போங்க"ன்னேன்.

சிறிது நேரத்திற்குப்பின் தாழ்வான குரலில் "பர்ஸ தொலச்சிட்டேன்"னான். ஒரு அடி விலகி வந்து "இன்னும் சம்பளமே போடல, காலையிலே வந்து" என கையை நீட்டிவிட்டு கொஞ்சம் தொலைவில் நின்று கவனித்தேன். மற்றொருவரிடம் பேசத் துவங்கியிருந்தான்.

பேருந்தில் ஏறி விமான நிலையம் நெருங்கும்போது உள்ளுணர்வு அந்த உருவத்தை அடையாளப்படுத்தியது. வெகுநாட்களுக்கு முன்  திருவான்மியூரில் பார்த்த அதே உருவம்

முதலில் பேசப்பட்டவர்களைக் கூட ஒருவகையில் மன்னித்துவிடலாமென்றால், கடைசியாக வழிப்பறி செய்தவனையெல்லாம்??.


ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

கொல்லைக்கி போனியா குத்தைக்கெடுக்க போனியால

மகனுக்கு ஹிந்தி சொல்லிக்கொடுக்க ஏதேனும் செயலி (APPLICATION) இருக்குமா என அக்காவிடமிருந்து ஒரு கேள்வி. தேடிப்பார்க்கிறேன் எனக்கூறினேன். அவனுக்கு இப்போது ஐந்து வயது ஆங்கில வழிக் கல்வி பயில சென்று வருகிறான். மொழி எதற்காக கற்கிறோம் என்று அறியாத சிறு உள்ளம். இப்போதே மூன்றாவது மொழியை கற்பிக்கிறார்கள், இதை கற்பிப்பது எனக்கூறலாமா என்றே புரியவில்லை. நான் பள்ளியில் படித்தபோது (தமிழ் வழிக் கல்வி) இரண்டாம் வகுப்பில் ஏ.பி.சி.டி சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள் அதன் தொடர்ச்சியாக மூன்றாம் வகுப்பிலிருந்து பாடங்கள் ஆரம்பிக்கும், எனக்கு நினைவேயில்லை என்ன படித்தேனென்று ஏ.பி.சி.டி யை தவிர்த்து. அந்த இரண்டாவது மொழியே கசப்பாகத்தானிருந்தது இன்றும் அப்படித்தான் இருக்கிறது.


ஒருநாள் மாலை வீட்டிற்கு வந்தவனிடம் படம் வரைவோமா என்று கேட்டதுமே சரியென்று கட்டிலிலிருந்து இறங்கிவிட்டான். நானும் பென்சில் வெள்ளைத்தாள் சகிதம் தரையில் அமர்ந்து விட்டேன். வீட்டின் மத்திய அறையில் இருக்கும் தொலைக்காட்சி

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

நவீனநகரமெனும் உலகமகா புழுகல்

நவீன நகரமாக (ஸ்மார்ட் சிட்டி) உருமாறப்போகும் நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது, இந்த கவர்ச்சியான வார்த்தை நமக்கு அளிக்கப்போவது என்ன?

நவீன திட்டங்களால் மேம்படுத்தப்படும் என செய்திகளின் வாயிலாக அறியும் வேளையில்  நடைமுறையில் இருக்கும் திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா எனும் கேள்வி எழுகிறது. மேலும் இத்திட்டம் மக்களின் அன்றாட வாழ்வில் ஏதும் மாற்றத்தை நிகழ்த்துமா இல்லை முகத்துச்சாயம் பூசிக்கொள்ளும் நடிகைகள் போல நகரம் தன்மீது  கட்டடங்களையும், விளக்குகளையும் அணிந்துகொண்டு அமைதியாகிவிடுமா?.

எதை மேம்படுத்தப் போகிறது அரசு சாலையில் பள்ளங்களையா? பேருந்தின் உடைந்த இருக்கையையா , துருப்பிடித்து தொங்குகின்ற ஏறும் இறங்கும் படிகளையா? இல்லை
நகரத்து சுவர்கள் அனைத்திலும் "நவீன நகரம் தந்த நமோவே அம்மாவே" என்றும்  இன்னபிற அரசியல் வியாதிகளை, சினிமா போலி புரட்சியாளனை தாங்கி ஒட்டிக்கொண்டிருக்கும் சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு தடை உருவாகுமா? அதற்கு சாத்தியமுண்டா நவீன நகரத்தில்?

இந்த செய்தியின் மறுபக்கம் வெளியாகியிருக்கும் அல்லது வெளியாகாமல் கரைந்துபோன அசம்பாவிதங்கள் நடைபெறாமலிருக்க ஏதும் செய்வார்களா?

முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படுவது போல் இருப்பதை விட்டு இல்லாததை பற்றிக்கொள்ள அரசு துடிப்பதன் காரணமென்ன?

இருக்கும் திட்டங்களால் எஞ்சி கிடக்கும் ஏரியும் குளமும் சமவெளியும் காடுகளும் இத்திட்டத்தால் மூடுவிழா காண நேரிடுமோ?

தொலைநோக்கு திட்டமாக உருவாக்கப்பட்ட 4000 அணைகள் இருந்தும் தற்போது  நீருக்காக விழி பிதுங்குகிறோமே, இதே நிலை அல்லது இதைவிட மோசமான நிலை இந்த நகரத்தால் உருவாகினால் அதை எவ்விதம் ஏற்றுக்கொள்ளப் போகிறோம்?.

விவசாயத்தை ஊக்குவிக்க ஏன்  தயங்குகிறார்கள்? ஒரு மாநிலம் மற்றொரு மாநிலத்தின் பயிர்  மற்றும்   காய்கனிகளில் நச்சுத்தன்மை இருப்பதை சுட்டிக்காட்டுகிறதே அதைப்பற்றி அறிக்கை விடத் தயங்குகிற அரசு நவீன நகரத்தில் உருவாக்கப் போவது என்ன? நிச்சயம் விவசாயத்திற்கும் இத்திட்டத்திற்கும் நேரடி உருவாக்கத்திற்கான தொடர்பு இல்லையென்றாலும் மறைமுகமாக மிகப்பெரிய அழிவு இருக்கிறது என்பதை மறுக்க இயலாது.

இந்த நகரத்தில் மக்களின் பங்கு என்னவாக இருக்கும்? விதிமுறை மீறலை ரத்தத்தில் இறவாது கலந்தவர்கள்தான் நாம்.  ஓட்டுப்போடவும், மாநாட்டிற்கும், மறியலுக்கும் ஐநூறோ ஆயிரமோ வாங்கி நக்கிக்கொள்வதோடு அரசியல் கடமை முடிந்துவிட்டது என்ற மட்டமான எண்ணம். படித்து பட்டம் வாங்கியவர்களே இப்படி மனநோய் பிடித்துத் திரிந்தால் பட்டறிவை பாடையில் ஏற்றிவிட்ட டாஸ்மாக் பாமரனை என்ன சொல்ல?.

அரசியல் பேசுங்கள் சமுதாயம் முன்னேற முயற்சி செய்யுங்கள் என நண்பர்களிடம் கூறவிளையும் போது, சமுதாயமே வேண்டாம் வேறு ஏதேனும் பேசுங்களேன் என்று கூப்பாடு. நாளைய பிள்ளைகள்  நம்மைக் காறி உமிழும், அதிலேனும் மேனியிலுள்ள அழுக்கை சுத்தம் செய்யத் தயாராக இருப்போம். அரசை மட்டும் குறை சொல்லிப் பயனில்லை.

நவீனநகரம் உலகத்தரம் என்கிறார்கள், இதுவரை சந்தையில் உலாவும் உலகத்தரங்கள் நமக்கு அளித்த வாழ்வியல் நன்மை என்ன?

உலகத்தரமென்பது உலகமகாப் புழுகல் என்பதைத்தவிர வேறொன்றுமில்லை.

திங்கள், 24 ஆகஸ்ட், 2015

மரணத்திற்கான வீதி

இரவின் விளிம்பில் நின்று கதிரவன் சோம்பல் முறித்துக் கொண்டிருந்தான். 

இரண்டு வாரமாக நாவலூருக்கு பயணிக்கிறேன். புது வழி புது வேலை, பயணநேரமும் அதிகம், காலை வேளை பேருந்தில் இருக்கைக்கு சாத்தியமுண்டு என்பதனால் பல்லி போல் ஒட்டிக் கொண்டிருந்தது தியோடர் பாஸ்கரன் எழுதிய “இன்னும் பிறக்காத தலைமுறைக்காக” புத்தகம்.

காடு, காட்டுயிர்கள், சரணாலையங்கள், புலிகள் காப்பகம், சிற்றுயிர்கள்,  அழிந்த உயிர்கள், நாம் அழித்துக் கொண்டிருக்கும் உயிர்கள் பற்றி பகிரப்படும் தகவல்கள் இதுவரை வாசிக்காதது. புலி ஏன் தேசிய விலங்காக இருக்கிறது என்பதற்கு இதற்கு முன் என்னிடம் பதிலே இல்லாமல் இருந்தது, ஆனால் இந்த புத்தகம் அதற்கான காரணத்தையும், புலிகள் சுற்றுச்சூழலுக்கு எத்தனை அவசியம் என்பதையும் இயல்பாக விவரிக்கிறது. உணவுச்சங்கிலியை ஐந்து மதிப்பெண்ணிற்காக காலாண்டுக்கும், அரையாண்டுக்கும், முழுவாண்டிற்கும் வாசித்த நம்மில் எத்தனை பேருக்கு இப்போது அது நினைவிருக்கும்?. அதில் புலிக்குத்தான் முதலிடம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?. எனக்கு மட்டும்தான் இப்படி என்றால் என்னைவிட நீங்க புத்திசாலியாக இருக்கலாம் இல்லை நடிக்கலாம். பள்ளிக்கு வெளியே கற்கவேண்டியது மிகையாக கொட்டிக் கிடக்கிறது என்பதை நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக அதையே கூறுகிறது.

நச்சுத்தன்மையற்ற பல்லியை உணவுக்கு எதிரியாக திரித்து விட்டதற்கு நாம் தான் காரணம் என்பது நமக்குத் தெரியுமா? உணவில் பல்லி விழுந்ததால் மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி எனக் கூவும் ஊடகங்களின் அறியாமையை பற்றி நாம் அறிந்திருக்கிறோமா?  யானை ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்தது என்கிறோம், இதில் உள்ள உண்மையை அறிந்திருக்கிறோமா? பக்கத்து மாநிலம் நமது காய்கனிகளில் நச்சுத்தன்மை இருப்பதால் தடை செய்வேன் என்கிறது இதற்கு யார் காரணம்?

காட்டுயிர் பற்றி அறிந்துகொள்ள தமிழிலில் சொற்கள் உருவாகவில்லை எனவும் அதுவே நம்மை இத்தனை காலம் காடுகளை பற்றி புரிந்துகொள்ளவும் விவாதிக்கவும் தெரியாமல் நெடுந்தூரம் அழைத்து வந்திருப்பது வேதனை அழிப்பதாக தெரிவிக்கிறார். மேலும் பல நூல்களை இத்தோடு அறிமுகம் தருகிறார். நிச்சயம் வாசிக்கவேண்டிய பெட்டகம்.

நாம் காடுகளை அழித்துக் கொண்டிருப்பதற்கு மௌன சாட்சிதான் பள்ளிக்கரணை சதுப்புநிலம். மேடவாக்கத்திலிருந்து சோழிங்கநல்லூர் செல்லும் சாலையில் குறிப்பிட்ட தொலைவிற்கு பிறகு சதுப்புநிலம் கண்ணுக்கு புலனாகிறது. சுற்றிலும் கட்டிடங்கள் வளர்ச்சியின் பெயரில் நீரை உறிஞ்சி உயர்ந்து நிற்கிறது. அங்கிருக்கும் சாலைகளெல்லாம் மரணத்திற்கான வீதி என்பதைத்தவிர வேறென்ன?.

சதுப்புநிலத்தில்
சகிப்புத் தன்மையோடு
நீரலையில் உடல் நனைத்து
புல் தரையில்
சிறகு உலர்த்தும்
உள்ளூர்ப் பறவைகளும்

வலசை வரும்
வெளிநாட்டுப் பறவைகளும்

அந்தரத்தில்
சிறகுலர்த்தும்
பெயரறியா பறவையொன்றும்

பேய்களென்று
நமை நினைக்கும்…..






புதன், 29 ஜூலை, 2015

இல்லை போன்றதொரு விளைவு

இன்றோடு மூன்றாவதுநாள்

இந்தியாவைப்பற்றி யானறியேன்

தமிழகத்தின் செய்திகளில்

ஊழல் இல்லை
கற்பழிப்பு இல்லை
களவு இல்லை
கள்ளக்காதல் கொலை இல்லை
சாதீய கொலை இல்லை
கௌரவக்கொலை இல்லை
பள்ளிகள் அலுவல்கள்
திரையரங்குகள் கடைகள்
நாளை மட்டும் இல்லை 

இல்லை

இவையெல்லாம்
இல்லை போன்றதொரு விளைவு

நாளையும் இப்படித்தானிருக்கும்
எதுவுமில்லாமல்
இல்லாத அவரின் உயிர்போல

நாளை மறுநாள்முதல்

இல்லை
அதற்கும் மறுநாள் முதல்
எல்லாம் இருக்கும்

இருக்கட்டுமே
அதுதானே வேண்டும் நமக்கு

ஆனால்
அவரின் ஆன்மா
எவரையும் பழிக்குமா எனக்கேட்டால்
தெரியாது..

புதன், 22 ஜூலை, 2015

எல்லாமே இல்லைதான்

மழை பெய்கிறது
கவிதை உருவம் பெறவில்லை
அத்தனைத் துளிகளும்
எழுத்துக்களாய்
உடலில் படர்ந்து
தரையில் ஊர்ந்து போகிறது
அவற்றைக் கோர்த்து
கவிதையெனும் கதவடைக்க விருப்பில்லை

குப்பை கொட்டியவர்களெல்லாம்
கதவடைத்து மூக்கடைத்து
நிற்க
சாக்கடை நாற்றம்

அன்னமாக மாறிவிட
மழைத்துளியின் மணம்
நாசியில்

இன்று சாளரம் சாத்திவிடலாம்
குளிருமில்லை கொசுவுமில்லை

எல்லாமே இல்லைதான்
இரவு இல்லையென்றால்
காலையும் இல்லைதான்

மழை
பெய்வதுபோல் பெய்கிறது